Jan 9, 2020

"போர்! போர்! போராட்டம்!"

தற்போது தமிழகத்தில் எங்கெங்கு காணினும்  போராட்டங்களாகவே இருக்கிறது.தினமும் காலையில் போராட்டங்களின் முகத்தில் தான் தமிழகம் கண்விழிக்கிறது.புறமுதுகு காட்டாத புறநானூற்றுப் போராளிகள் வீதிகளெங்கும் திரிகின்றனர்.

இவற்றுள் ஒருசில போராட்டங்கள் சமுதாய மாற்றத்திற்கு மிகவும் அவசியமானவை.அவற்றை மக்களும் தம் கைகளில் எடுக்கின்றனர்.ஆனால் பல போராட்டங்களுக்கான காரணங்கள் போராடுபவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை!சமயத்தில் போராடுபவர்களுக்கே தெரிவதில்லை!

இவ்வாறு அனுதினம் போராட்டங்களுடனே வாழ்வு என்றாகிவிட்ட மக்களுக்கு,போராட்டம் என்பது இப்போதெல்லாம் போரடிக்க ஆரம்பித்துவிட்டது!

போராட்டங்களை சுவாரஸ்யப்படுத்த வேறு யாரெல்லாம்,எதற்கெல்லாம் போராடலாம்?


நடிகர்கள்:

கதையே இல்லை என்று கடுப்படிக்கும் விமர்சனங்கள்,

ரசிகரே இல்லை எனும் ரகளையான டாக்குகள்,

வயதையும்,விக்கையும் குறித்து வருத்தப்பட வைக்கும் வசவுகள் ஆகியவற்றுக்கு எதிராய் பொங்கி எழலாம்!


அதிகாரிகள்:

கமிஷன்,லஞ்சம்,ஊழல் போன்ற சொல்லாடல்கள்,

அறிவு,அனுபவம்,படிப்பு போன்ற கருத்தாடல்கள்,

கட்சி சார்பு போன்ற கஷ்டமான டாஸ்குகள் ஆகியவற்றுக்கு எதிராய் களம் காணலாம்.


இயக்குநர்கள்:

கதை காப்பி காப்பி எனும் கண் கலங்கச் செய்யும் கண்டனங்கள்,

அடுத்த படத்திலாவது இயக்குநர்... என கிழித்து தொங்கவிடும் விமர்சனங்கள்,

எந்தப் படம் எடுத்தாலும் இது என் கதை எனும் அபாய அலறல்கள் ஆகியவற்றுக்கு எதிராய் கரம் உயர்த்தலாம்.


நடிகைகள்:

பொங்கலுக்கு வெள்ளையடித்தது போன்று என்ற தாங்க முடியாத விமர்சனங்கள்,

நடிகை அழகாக மட்டுமே இருக்கிறார் ஆனால் நடிப்பு? என்ற கொடூரமான கூற்றுகள்,

வயதானதால் முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது என்ற வன்மையான உண்மைகள் ஆகியவற்றுக்கு எதிராய் ஆற்றலுடன் போருக்கு போகலாம்.


போலிஸ்காரர்கள்:

குனிந்து கால் கட்டை விரலைத் தொட முடியுமா என்ற அபத்தக் கேள்விகள்,

மாமூல் வாழ்க்கை என்ற மறக்க விரும்பும் மெய்மைகள்,

ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக இருந்த காவல்துறை இப்போது என்று சங்கமிக்கும் சங்கடங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கால்கடுக்க போராடலாம்.


கண்டக்டர்கள்:

சில்லறை இல்லை எனும் சலம்பல்கள்,

படியிலேயே குடியிருக்கும் ரோட்டோர ரோமியோக்கள்,

நிறுத்தத்தில் இறங்காமல் விட்டோரின் சாமியாடல்கள் ஆகியவற்றிற்கு எதிராய் நடைபயணமாய் போராடலாம்.


சாமியார்கள்:

அதிரடி காட்டும் நள்ளிரவு சோதனைகள்,

சிறப்பை சிதறடிக்கும் சி.டிக்கள்,

கைதுக்குக் காரணமாகும் கனவுக் கன்னிகள் ஆகியவற்றுக்கு எதிராய் தியானப் போராட்டம் புரியலாம்.



கிரிக்கெட் வீரர்கள்:

அள்ளித் தெளிக்கும் புள்ளி விபரங்கள்,

என்ன ஆடறான் எனும் ஆயாக்களின் தாளிப்புகள்,

வெற்றியின் விளிம்பில் சடசடக்கும் மழை ஆகியவற்றுக்கு எதிராய் ஓடி ஓடிப் போராடலாம்.


பிச்சைக்காரர்கள்:

குல்லாய் போடும் செல்லாத நோட்டுகள்,

அவ்வப்போது ஆக்கிரமிப்பு என அப்புறப்படுத்தும் அதிகாரிகள்,

உழைப்பு என்ற பிழைப்பைக் கெடுக்கும் சொற்கள் ஆகியவற்றுக்கு எதிராய் அமைதிப் போராட்டம் நடத்தலாம்.



பூசாரிகள் :

நாவன்மையுடைய நாத்திகவாதிகள்,

தட்டுக் காசினை தகர்க்கும் உண்டியல்கள்,

சாமியாடுகையில் சங்கடப்படுத்தும் கேள்விகள் ஆகியவற்றுக்கு எதிராய் தீச்சட்டி எடுக்கலாம்.


கணவர்கள்:

அபாயகரமான அழுகாச்சி சீரியல்கள்,

உயிரே இல்லாத உப்புமாக்கள்,

தலை கிறுகிறுக்க வைக்கும் தள்ளுபடிகள் ஆகியவற்றிற்கு எதிராக தினவுடன் போராடலாம்.


மனைவிகள்:

கணவர்களைக் கிறுக்குப் பிடிக்க வைக்கும் கிரிக்கெட் மேட்ச்கள்,

பேராண்மைக்கு எதிரான பேஷன் ஷோக்கள்,

ஆறே வாரங்களில் சிகப்பழகு என்ற அபத்தங்கள் ஆகியவற்றை எதிர்த்து கோதாவில் குதிக்கலாம்.


கல்லூரி மாணவர்கள்:

இணைய தொடர்பை அந்தரத்தில் தொங்க விடும் ஜாமர்கள்,

செட்டே ஆகாத செமஸ்டர்கள்,

மலைமேல் மலைபோல் வந்து குவியும் அரியர்கள் ஆகியவற்றிற்கு எதிராய் களத்தில் உன்மத்தம் கொள்ளலாம்.

அம்மாக்கள்:

தன் குழந்தையை டோலக்பூரிலிருந்து மீட்கவும்,

குழந்தைகளுக்கு விட்டு விடுதலையான விடுமுறை நாட்களைக் குறைக்கவும்,

தன் அன்பை விட தன் குழந்தை அதிகம் உருகும் ஐஸ்கிரீம்,சாக்லேட் உற்பத்தியைத்
தடுக்கவும் தாய்மார்கள் வீரச்சமர் புரியலாம்.


மாமியார்கள்:

கொடுமைக்கார மாமியார் சீரியல்களைத் தடை செய்யக் கோரியும்,

வரதட்சணை என்ற சொல் வரலாற்றுப் பிழையான இதை எதிர்த்தும்,

தலையணை மந்திரங்கள் தடை செய்யக் கோரியும் உணர்வுடன் போரிடலாம்.


காதலர்கள்:

சுதந்திரம் கெடுக்கும் சுண்டல்காரர்களை எதிர்த்தும்,

கிண்டல் செய்து கீச்சிடும் ஜோக்குகள் நீக்கவும்,

திடுக்கிடச் செய்யும் கூட்டம் நிறைந்த திரையரக்குகள் ஆகியவற்றுக்கு எதிராய் கை கோர்த்துப் போராடலாம்.


சேல்ஸ்மேன்கள் :

அரை நாள் கழித்து எதுவும் பிடிக்கவில்லை எனும் ஏமாற்றங்கள்,

தள்ளுபடியை விட தள்ளச் சொல்லும் தர்ம சங்கடங்கள்,

நின்றே சலிக்கும் நிர்பந்தங்கள் ஆகியவற்றிற்கு எதிராய் பொறுமையாய் போராடலாம்.


குழந்தைகள்:

டிவி,செல்போனில் போடப்படும் பேரண்டியல் லாக்குகள்,

மாலை நேர மகிழ்ச்சியைக் கொல்லும் டியூசன் கள்,

எதற்கிந்த கொடுமை எனும் மாறுவேடப் போட்டிகள் ஆகியவற்றுக்கு எதிராக மார்தட்டிப் போராடலாம்.

அரசியல்வாதிகள்:

குதிரை பேரம் நடக்கையில் குளிர் காயும் மீடியாக்கள்,

எப்போதாவது தொகுதிப் பக்கம் சென்றால் ஏற்படும் மக்களின் முற்றுகைகள்,

வளர்ச்சி நிதிகளில் கிளர்ச்சி செய்யும் ஆய்வுக் குழுக்களுக்கு எதிராய் வேட்டியை மடித்துக் கட்டலாம்.


தமிழக மக்கள்:

பேராட்டங்களால் பொறுமை இழந்து போன தமிழக மக்கள்,போராட்டங்கள் போதுமடாசாமி,இனி போராட்டங்களே வேண்டாம் என ஒன்றிணைந்து போராடலாம்!

-அகன்சரவணன்

No comments:

Post a Comment