Jan 31, 2021

"Positive Pay" என்னும் புதிய காசோலை சரிபார்ப்பு முறை!

 














     






"Positive Pay செயல்முறை...! - காசோலை மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியின் புதிய பிளான்"


> ஜனவரி 2021 முதல் Positive Pay முறையிலான காசோலை பரிவர்த்தனை முறை அனைத்து வங்கிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.


> 50,000 ரூபாய்க்கு மேலுள்ள காசோலைகளுக்கு இந்த வசதி கிடைக்கும்.


> 5,00,000 ரூபாய்க்கு மேலுள்ள காசோலைகளுக்கு Positive Pay கட்டாயம்.




வங்கிகளில் காசோலைகள் (Cheques) மூலமாகச் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் அளவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.அதே நேரத்தில்,காசோலைகள் தொடர்பான குற்றங்களும்,மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.


காசோலைகள் தொடர்பான மோசடிகளைக் குறைக்கவும்,காசோலைகள் மூலம் பணம் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்கவும்,பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றவும் 50,000 ரூபாய்க்கு மேல் பணமதிப்பு உள்ள காசோலைகளுக்கு "Positive Pay" என்னும் ஒரு செயல்முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.


2019 ஆகஸ்ட்டில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் (Monetary Policy Committee-MPC) மறுஆய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


"Positive Pay" முறை விளக்கம்:


Positive Pay என்பது காசோலைகளின் மோசடியைத் தடுக்கும் மற்றும் மோசடியைக் கண்டறியும் ஒருவகை அம்சமாகும்.இந்த முறையானது வங்கிப் பரிவர்த்தனைகளில் இன்னொரு அடுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.இந்தப் புதிய அம்சத்தின்படி காசோலை பணமாக மாற்றப்படுவதற்கு (Encash) முன்னர் காசோலை  தொடர்பான அனைத்து தகவல்களும் இருமுறை சரிபார்க்கப்படுகின்றன.










Positive Pay செயல்படும் முறை


* ரூபாய் 50,000 க்கு மேல் மதிப்புள்ள காசோலையை வழங்கும் நபர்,தனது கணக்கு உள்ள வங்கியினை நேரடியாக அணுகியோ,ஏ.டி.எம் மூலமாகவோ,தொலைபேசி - எஸ்.எம்.எஸ் மூலமாகவோ,மொபைல் செயலியிலோ அல்லது இணையதளத்திலோ தன்னால் வழங்கப்பட்ட காசோலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


* காசோலையைப் பயனாளிக்கு வழங்குவதற்கு முன்பு அதன் இரு பக்கங்களையும் புகைப்படம் எடுத்து (Optional) அத்துடன் காசோலை எண்,காசோலை தேதி,பணம் செலுத்துபவரின் பெயர்,கணக்கு எண்,தொகை போன்ற தகவல்களையும் தனது வங்கியுடன் பகிர வேண்டும்.


* காசோலை சார்ந்த அனைத்துத் தரவுகளும் வழக்கமான முறையில் (CTS) வங்கியால் சோதிக்கப்படும்.அத்துடன் பயனாளி பகிர்ந்த காசோலை குறித்த தரவுகள் அனைத்துமே Positive Pay முறையிலும் முழுமையாகச் சோதனை செய்யப்படும்.


* காசோலையில் உள்ள மற்றும் அளிப்பவர் பகிர்ந்த தகவல் தரவுகள் பொருத்தமாக இருந்தால் மட்டுமே காசோலைக்குப் பணம் வழக்கப்படும்.


* Positive Pay முறையிலான காசோலை சோதனையில்,தரவுகளில் ஏதேனும் பொருத்தம் இல்லாமல் இருக்கும் போது,காசோலைக்குப் பணம் வழங்குவது நிறுத்தி வைக்கப்படும்.


* வங்கி காசோலை வழங்கிய நபரைத் தொடர்பு கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காசோலையின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்திக் கொள்ளும்.


* இறுதியாகக் காசோலை வழங்கிய நபரின் முடிவின் அடிப்படையில் காசோலைக்குப் பணம் வழங்கப்படும் அல்லது மறுக்கப்படும்.


சிறப்பம்சங்கள்:


# Positive Pay என்பது காசோலை மோசடியைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தானியங்கி (Automatic) பண மேலாண்மை சேவையாகும்.


# மோசடி,இழப்புகள் மற்றும் பிற குறைபாடுகளுக்கு எதிரான ஒருவரின் காப்பீட்டு வடிவமாக இந்த அம்சம் செயல்படுகிறது.


# Positive Pay அம்சம் சேமிப்புகளை நெறிப்படுத்தவும் மற்றும் மீட்டெடுப்புகளை முறைப்படுத்தவும் செய்கிறது.


# மோசடியைத் தடுக்க இந்த அம்சம் எளிய மற்றும் பயனுள்ள வழியாகும்.


# ஏறக்குறைய 20% பரிவர்த்தனைகள் மற்றும் 80% சதவீதம் பணமதிப்பு Positive Pay அம்சத்தின் கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வரம்புகள்:


# 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையுடைய காசோலைகளுக்கு இந்த வசதி கிடைக்கும்.வாடிக்கையாளர் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.


# ஆனால் 5,00,000 ரூபாய்க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு Positive Pay முறை கட்டாயமாகும்.












Positive Pay முறையின் பயன்கள்:


1)காசோலை பரிவர்த்தனைகளின் போது மோசடிகள் நடைபெறுவதைக் குறைக்கிறது.


2)காசோலையின் பரிவர்த்தனைப் பிழைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.


3)வங்கி மற்றும் வாடிக்கையாளர் இடையே நல்லிணக்கத்தினை உண்டாக்குகிறது.


4)வாடிக்கையாளரின் சொத்துமதிப்பு பாதுகாக்கப்படுகிறது.


5)வாடிக்கையாளர் தங்கள் கணக்கின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது.


6)நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள் நெறிப்படுத்தப்படுகின்றன.


7)காசோலைகளின் நல்லிணக்கத்தை மேம்பட்ட தானியங்கி முறைக்கு மாற்றுகிறது.


8)வணிகத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.


9)கணக்குகளிடையே பரிமாற்றத்தையும், செலுத்துதலையும் எளிதாக்குகிறது.


10)தணிக்கை கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது.


11)பரிவர்த்தனை சமநிலையின் துல்லியத்தை மேம்படுத்துகிறது.


13)தள்ளுபடி அபாயத்தைக் குறைக்கிறது.


14)வணிகத்தில் நேரத்தையும்,பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.


15)வங்கியியலின் நம்பகத்தன்மைையை மேம்படுத்துகிறது.


இந்த Positive Pay போன்றதொரு அம்சத்தை ஐசிஐசிஐ வங்கி 2016 ஆண்டு முதலே செயல்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.இந்திய ரிசர்வ் வங்கி,இந்த வழிமுறை தொடர்பான நிலையான இயக்க நடைமுறைகளை (Standard Operating Procedure-SOPs) நாணயக் கொள்கைக் குழுவின் பரிந்துரைப்படி அனைத்து வங்கிகளுக்கும் அளித்துள்ளது.



ஜனவரி 2021 முதல் Positive Pay முறையிலான காசோலை பரிவர்த்தனை முறை (Cheque Truncation System-CTS) அனைத்து வங்கிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.







இந்த வசதி போலியான காசோலைகள் மற்றும் தவறான நபர்களிடம் செல்லும் காசோலைகள் போன்றவற்றினால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் இழப்புகளைத் தடுக்கும் கேடயமாக அமையும் என்று நம்புவோம்!


- அகன் சரவணன்

Jan 22, 2021

ஜோ பிடெனின் சுவாரஸ்யப் பக்கங்கள்!

 






அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளையும்,பெரும் தாக்கத்தையும் ஜோ பிடென் ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

அவர் குறித்து நாம் அறிந்திராத சில சுவாரஸ்யமான தகவல்கள்...

ஜோ பிடென்.இன்று உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற மனிதர்.இவர் அமெரிக்காவின் பழுத்த,பழம்பெரும் அரசியல்வாதிகளுள் ஒருவர்.

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது எட்டு ஆண்டுகள் துணை அதிபராகவும், கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் அமெரிக்க செனட்டராகவும் பணியாற்றிய ஜோ பிடென்,அமெரிக்காவுக்குச் செய்த சேவைகள் ஏராளம்.அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளையும்,பெரும் தாக்கத்தையும் ஜோ ஏற்படுத்தியிருக்கிறார்-ஏற்படுத்தவும் உள்ளார் என்றால் அது மிகையில்லை!

ஜொ பிடென் குறித்து நாம் அறிந்திராத சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

#சிராகஸ் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் படித்தபோது,பிடெனும் அவருடைய முதல் மனைவியும் ஒரு நாய்க்குட்டியை வளர்த்தனர்.அதற்கு அவர்கள் வைத்த பெயர் `செனட்டர்!’ அதன் பிறகு அமெரிக்க காங்கிரஸிலுள்ள செனட் சபையில் செனட்டராக 36 ஆண்டுகள் பணியாற்றினார் பிடென். கோ-இன்சிடன்ட்!




# `பூ-பூ’ என்பது ஜோ பிடெனை அவருடைய சகோதரர்கள் அன்பாக அழைத்த புனைப்பெயர். - பூ-பூ குறிஞ்சிப்பூ!




# ஜோ பைடன் தனது சிறுவயதில் திக்குவாய் உடையவராக இருந்தார்.அதை அவர் ஒரு குறைபாடாகக் கருதவில்லை.தனக்கு சிந்திக்கக் கிடைத்த நேரமாகவே அந்தத் தருணங்களைக் கருதினார்.பிடென் சட்டக்கல்லூரியில் பயிலும்போது தனது நண்பரின் உதவியுடன் தனது பேச்சுக் குறைபாட்டுப் பிரச்னையை பெருமளவு சரிசெய்துகொண்டார்.இன்று இந்தப் பிரச்னை இருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு இவர் ஒரு தூண்டுகோலாக விளங்குகிறார். -பாசிட்டிவ் கார்னர்!



# ``ஜோ பைடனின் தன்னம்பிக்கை,எனது முழு வாழ்க்கையையும் தொந்தரவு செய்த ஒரு விஷயத்தைப் பற்றி எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது; என பேச்சுக் குறைபாடுள்ள அமெரிக்காவின் 13 வயது சிறுவன் பிரெய்டன் ஹாரிங்டன் கடந்த வாரம் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறான்.
-நம்பிக்கை நாயகன்!



# ஜோ பைடன் இரு முறை திருமணம் செய்துகொண்டவர்.அவர் 1966-ல் நீலியா பிடெனை மணந்தார்.அவர்களுக்கு நவோமி,ராபர்ட்,மூன்றாம் ஜோசப் ஆகிய மூன்று குழந்தைகள்.நீலியாவின் இறப்புக்குப் பிறகு ஜோ பைடன் 1977-ல் ஜில் பிடெனுடன் மறுமணம் செய்துகொண்டார்.இந்தத் தம்பதியரின் ஒரே பெண் குழந்தை ஆஷ்லே!


# இவர் முதன்முதலில் நீலியாவின் தாயைச் சந்தித்தபோது ``எதிர்காலத்தில் என்னவாக ஆகப்போகிறாய்?’’ என்று அவர் கேட்டார்.அதற்கு பைடனின் பதில் ``அமெரிக்க அதிபராகப்போகிறேன்’’ என்பது. - கனவு நாயகன்!



# ஜோ பைடன் இளமையில் வறுமையில் வாடியவர்.காதலியுடனான சந்திப்புகளில், உணவகத்தில் பில் செலுத்துவதற்கு போதுமான பணம் ஜோவிடம் இருக்காது. அப்போது நீலியா மேசையின் கீழ் சில டாலர்களை நழுவ விடுவாராம்.அவற்றை லாகவமாக எடுத்து பில் தொகையைச் செலுத்துவாராம் பைடன்.-வறுமையிலே இனிமை காண முடியுமா?



# அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினராக, குறைந்தபட்ச வயது 30.ஆனால 29 வயதாக இருந்தபோதே பைடன் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதில் சட்ட விதிமீறல் எதுவும் இல்லை. இவர் செனட்டராகப் பதிவியேற்றபோது வயது 30. - மைனர் டு மேஜர்!



#1972-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்யும்போது,பைடனின் முதல் மனைவி நீலியா,மகள் நவோமி ஆகியோர் கார் விபத்தில் இறந்தனர்.இரு மகன்களும் படுகாயமடைந்தனர்.இதே ஆண்டு பைடன் செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டார்.

படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தன் மகன்களைக் கவனிப்பதற்காக பைடன்,தன் செனட்டர் பதவியைத் துறக்க முடிவு செய்தார்.

ஆனால்,பைடனின் அசாத்திய திறமை காரணமாக அப்போதைய செனட்டின் பெரும்பான்மைத் தலைவர் இதை ஏற்கவில்லை.எனவே,பைடன் மருத்துவமனையில் தனது மகனின் படுக்கையில் இருந்தவாறே செனட்டராகப் பதவியேற்றார். - படுத்தபடியே வெற்றி!



# ஓர் ஆச்சர்யமான செய்தி,ஜோ பைடனிடம் புகைப் பழக்கமோ,குடிப்பழக்கமோ சுத்தமாக இல்லை.இந்த நடத்தைகளை மனிதனின் `ஓர் ஊன்றுகோல்’ என்று பிடென் குறிப்பிடுகிறார்.`இவற்றுக்கு பதிலாக கால்பந்து,மோட்டார் சைக்கிள்,ஜம்ப்பிங் மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டுகளே தனது ஊன்றுகோல்கள்’ என்கிறார் பைடன். - டீ டோட்டலர்!



# 2014-ம் ஆண்டில் வெளிவந்த சொத்து விவரக் கணக்கெடுப்பில் அமெரிக்காவின் அரசு அதிகாரிகளில் குறைவான சொத்துகள் கொண்டவர்களில் ஒருவராக பைடன் பட்டியலிடப்பட்டார்.மொத்தமிருந்த 581 பேரில் பைடனுக்கு 577-வது இடம். - அரசியலில் எளிமை!


# ஜோ பைடனின் வயது மற்றும் உடல்நலம் குறித்த கேள்விகளை எழுப்பி, `உங்கள் மருத்துவக் குறிப்புகளை வெளியிட முடியுமா?’ என்று கேட்டார் ஒரு நிருபர்.`என்னுடன் நீங்கள் மல்யுத்தம் செய்ய விரும்புகிறீர்களா?’ என்று அவரது கேள்விக்கு வேடிக்கையாக பதிலளித்திருக்கிறார் இந்த 77 வயது இளைஞர். - பேட்டிக்குப் போட்டி!



# 1988-ம் ஆண்டில் பைடனின் மூளையில் அனீரிசிம் (Aneurysm) கசிவு இருந்ததால் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பிடெனின் மன ஆரோக்கியம் தெளிவாக இருப்பதாகச் சான்றளித்த பிறகே அவர் பிந்தைய தேர்தல்களில் போட்டியிட முடிந்தது. - யார் என்று தெரிகிறதா?



# ஜோ பைடன் தனது குடும்ப வாழ்க்கையையும்,அரசியல் வாழ்க்கையையும் சமப்படுத்த செய்த ரயில் பயணம் ஆச்சர்யமானது. வில்மிங்டன் புறநகரிலுள்ள தனது வீட்டிலிருந்து வாஷிங்டன் டி.சி-க்கு கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் தினமும் 90 நிமிடங்கள் ஆம்ட்ராக் ரயிலில் அவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.செனட்டராக இருந்த காரணத்தால் செனட் சபை மூலம் ஆம்ட்ராக் ரயில் சேவைக்குப் பல சலுகைகளைப் பெற்றுத் தந்தார். எனவே, `ஆம்ட்ராக் ஜோ’ என்ற புனைப்பெயரில் இப்போதும் இவர் அழைக்கப்படுகிறார். -ரயில் மனிதன்!




#ஜோ பைடன் ஒரு காலத்தில் LGBT (Lesbian, Gay, Bisexual and Transgender) உரிமைகளுக்கு எதிராக இருந்தார். ஆனால்,பைடனின் கருத்து பின்னாள்களில் மாறியது. 2012-ம் ஆண்டில் அவர் LGBT திருமணம் மற்றும் உரிமைகளை ஆதரிப்பதாக பகிரங்கமாகக் கூறினார்.மேலும், திருநங்கைகளை ராணுவத்திலிருந்து தடைசெய்ததற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கண்டித்தார்.

தற்போது 2020 பிரசாரத்தின் ஒரு பகுதியாக LGBT நபர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டங்களை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். - காவலன்!



# உள்நாட்டு வன்முறை,பாலியல் வன்கொடுமை மற்றும் டேட்டிங் வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டம் (Violence Against Women Act-VAWA) 1994-ம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டுவரப்பட பைடனின் பங்களிப்பு முக்கியமானது. - பெண்கள் நாட்டின் கண்கள்!



# வன்முறைக் குற்றக் கட்டுப்பாடு, சட்ட அமலாக்கச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான சட்டங்களை அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கு பிடென் தலைமை தாங்கினார். - சட்டத்தின் காவலன்!




# இது அதிபர் பதவிக்கு ஜோ பைடன் போட்டியிடும் முதல் தேர்தல் அல்ல. முன்னதாக 1988 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் பிடென் இரண்டு முறை அதிபர் தேர்தலுக்கான,கட்சி அளவிலான பூர்வாங்கத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார்! - வெற்றிகரமான தோல்விகள்!



# `என் பெயர் ஜோ பைடன். நான் ஐஸ்க்ரீமை விரும்புகிறேன்’’ என்று கூறி பைடன் தனது ஓர் உரையைத் தொடங்கியிருக்கிறார்.அந்த அளவுக்கு பைடன் ஐஸ்க்ரீமின் மிகப்பெரிய ரசிகர்! - உருகும் ஐஸ்!



# ஜோ பைடன் ஒரு வாகன ஆர்வலர் (Gearhead) தனது ஐபோனில் கார் மற்றும் டிரைவர் (Car and Driver Magazine) பத்திரிகையின் இணையத்திலிருந்து நோட்டிஃபிகேஷன்களை இப்போதும் பெறுகிறார்! - மோட்டார் ஹெட்!



`உங்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஒருகட்டத்தில், தோல்வி தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.ஆனால்,அதற்காக நாம் விட்டுக்கொடுப்பது ஒருபோதும் மன்னிக்க முடியாதது!’ என்று கூறும் 77 வயது இளைஞரான ஜோ பைடன் அமெரிக்க அதிபராக என்ன செய்யப்போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்!

அகன் சரவணன்