Jul 13, 2020

பிட்காயின் - ஒரு பார்வை

பிட்காயின் தடை நீக்கம் -இந்திய வணிகத்தின் புதிய அத்தியாயம்:







கிரிப்டோகரன்சி மீதான தடை இந்தியாவில் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி மீது ரிசர்வ் வங்கி விதித்த தடையை,உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.இதன் மூலம்,பிட்காயின் பரிவர்த்தனை இந்தியாவில் துவங்கும் வாய்ப்பு உள்ளது.


வெர்ச்சுவல் அல்லது மெய்நிகர் நாணயம் என்று அழைக்கப்படும் இந்த கிரிப்டோகரன்சிகளுக்கு முழுமையான தடையை விதித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2018 சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.இதை எதிர்த்து,
இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பொருளாதாரத்தில் இந்த நாணயங்களின் தாக்கத்தை அளவிட எந்த முன் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாததால்,ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்ஸிகளை தார்மீக அடிப்படையில்தான் தடை செய்தது.இது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று, வேண்டுகோள்விடுத்தது.

மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் வெளியிட்ட உத்தரவில்,2018 ஆம் ஆண்டில் வெளியான ஆர்பிஐ சுற்றறிக்கை நியாயமற்றது மற்றும் ஏற்றத்தாழ்வானது என்று கூறி அதை ரத்து செய்துள்ளது.

பிட்காயின் என்றால் என்ன?

வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகள் உலகம் முழுக்க இருக்கிறது. நாணயங்கள்,நோட்டுக்கள் பணமாக பயன்படுத்தப்படுகிறது.ஆனால் பிட் காயின் என்பவை டிஜிட்டல் வடிவிலானவை. இவற்றுக்கு நாடு எல்லைகள் எதுவும் கிடையாது.


2009ம் ஆண்டு சட்டோஷி நகோமோடோ என்பவர்தான்,பிட்காயின்,ஐடியாவை அறிமுகம் செய்தவர்.இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட எந்த தகவலும் கிடையாது.தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 10,000 டாலர்களை கடந்துவிட்டது. இன்றயை நிலையில்,ஒரு பிட்காயினின், இந்திய ரூபாய் மதிப்பு, 6,42,631.07 என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும்.
நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் சேமித்து வைக்க முடியும்.மைனிங் என்ற நடைமுறையை செய்து முடித்து பிட்காயின்களை வாங்கலாம்,அல்லது உங்களிடமுள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.

ஆச்சரிய தகவல் என்றால்,உலகம் முழுவதும் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இணையதளங்களிலும் பொருட்கள் வாங்கலாம்,விரும்பிய நாட்டின் பணமாகவும் அதை மாற்ற முடியும்.

முற்றிலும் டிஜிட்டல் முறையில் பிட்காயின் வணிகம் நடக்கிறது.எனவே மேற்பார்வை செய்யவோ கட்டுப்படுத்தவோ அமைப்புகள் இல்லை.இதுதான் அச்சத்திற்கு காரணமாகியுள்ளது.எப்படி உயர்ந்ததோ அதேபோல மதிப்பு வீழ்ச்சியடைந்துவிட்டால்,என்ன செய்வது என்ற பயமும் உள்ளது.

இரண்டு நபர்களுக்கிடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையேயோ பரிமாற்றம் நடப்பதால்,வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.கட்டற்ற சுதந்திரம்தான் இந்த வகை வணிகத்தின் நன்மையும்,தீமையும்!

பார்க்கலாம்! இந்திய சந்தையில் இந்த பிட்காயினின் ஆதிக்கத்தை.