Apr 4, 2021

அரசியல்-தொழில் அல்ல;சேவை!

 







அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவை உலகச் சங்கிலியின் மூன்று கண்ணிகள் என்பார் கார்ல்மார்க்ஸ்.


ஒருகாலத்தில் சேவைப் பணியாக  இருந்த,உலகச் சங்கிலியின் முதன்மைக் கண்ணியான அரசியல்,தனது குறிக்கோளில் இருந்து முற்றும் பிறழ்ந்து,தொழில் என இன்று மாறிப்போனது துயரகரமான ஒன்றுதான்!



இன்று அரசியலில் இருக்கும் மற்றும் புதிதாக அரசியலுக்கு வர இருக்கும் பெரும்பான்மையான அரசியல்வாதிகளின் எண்ணம்,இந்த  வியாபாரத்தில் இருந்து என்ன வருமானம் கிடைக்கப் போகிறது என்பதில் தான் இருக்கிறது!



தேர்தலுக்காக தொகுதிக்கு 10 கோடி 20 கோடி என செலவு செய்யும் ஆட்கள்,வெற்றி பெற்றவுடன் மக்களுக்கு சேவை செய்வார்கள் என மக்கள் எதிர்பார்ப்பது ஆச்சரியமூட்டும் ஒன்று.ஒவ்வொருவரும் தாங்கள் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக,மும்மடங்காகத் திரும்பப் பெறும் செயல்பாடுகளில்தான் முனைப்புக் காட்டுவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!



கோடிகளைக் கொட்டி செலவு செய்யக்கூடிய ஒரு வேட்பாளர்,வெற்றி பெற்றவுடன் மக்களுக்கு சேவை செய்வார் என்பது நகை முரணாகவே தொடர்ந்து கொண்டு இருக்கிறது.




லஞ்சம்,ஊழல் போன்ற மலிவான செயல்கள் எல்லாம் அவமானமூட்டும் பெரும் பாவச்செயல்களாக ஒருகாலத்தில் இருந்தன.ஆனால் இன்று அவை பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ள கூடிய,ஒரு சாதாரண செயலாக மாறிப்போய் விட்டன என்பது அவலத்தின் உச்சம்.




தன்னுடைய வேலையை மிகச் சுலபமாக செய்துகொள்வதற்காக லஞ்சம் கொடுக்கக் கூடிய ஒருவர்,வாய்ப்பு கிடைக்கும்போது லஞ்சம் வாங்கக் கூடிய ஒருவர்,தன்னை ஆள்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புவதில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை!



நான் சிறு சிறு அளவில் லஞ்சம் கொடுப்பேன்,வாக்களிக்க பணம் பெறுவேன்,எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் லஞ்சம் பெறுவேன்.ஆனால் எனக்கு வரக்கூடிய ஆட்சியும்,நான் தேர்ந்தெடுக்கக்கூடிய அரசியல்வாதியும் லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டவராக - நேர்மையானவராக இருக்க வேண்டும் என மக்கள் நினைப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை!முதலில் நல்லாட்சிக்கு நாம் தகுதியானவர்கள் தானா என்பதை ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.









ஒரு வாக்காளர் வாக்களிக்க பணம் பெறுகிறார் என்றால்,அவர் மறைமுகமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடக்கக்கூடிய லஞ்ச ஊழலில் கூட்டு வைத்துக் கொள்கிறார் என்பதே நிதர்சனமான உண்மையாகும்!




வசதியற்ற ஏழை,எளிய மக்கள் வாக்களிக்கப் பணம் வாங்குவது என்பது ஏற்புடையதுதானே என்ற ஒரு நியாயப்படுத்தலும் இங்கு நடக்கிறது. ஆனால் எந்த விதத்தில் லஞ்சம் பெற்றாலும் அது அறமற்ற செயலே என்பதை மக்கள் உணரவேண்டும்.




வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு என தனியாகப் பெரும் நிதியை ஒதுக்கி வைக்கின்றன.மேலும் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தேர்தல் நிதி என கோடிக்கணக்கான பணத்தை அரசியல் கட்சிகளுக்குக் கொட்டிக் கொடுக்கின்றனர்.இவ்வாறு கொடுக்கப்படும் நிதிக்கு பிரதியுபகாரமாக,குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பணம் கொடுத்தவர்களுக்குத் தேவையானவற்றை சட்டத்துக்கு அப்பாற்பட்டு செய்ய மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!எனவே வாக்காளிக்கப் பணம் பெறுவது என்பது ஊழலின் ஒரு ஆழமான ஊற்றுக்கண் தான்!





ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்பவர் இந்த சமூகத்தில் இருந்துதான் உருவாகிறார்.சமூகம் முழுக்கவே லஞ்ச ஊழல் புரையோடிப் போயிருக்கும் போது,அச்சமூகத்திலிருந்து வரக்கூடிய தலைவர் அவ்வாறே இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?



இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில்,அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,இது என்னுடைய சாதனை.இதை நான் செய்தேன் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பிரச்சாரங்களில் கூறுவதும்,அவற்றைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதும் தான்!



மக்களின் வரிப்பணத்தில்,மக்களுக்கான திட்டங்களை நிறைவு செய்வதற்குத்தான் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதற்கான அதிகாரம்,வசதிகள்,ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படுகின்றன.

இவை அனைத்தையும் பெற்றுக் கொண்டு அதற்கான வேலையை செய்வதுதானே முறை! அந்த வேலையை ஏதோ சாதனை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்.மேலும் அவர்கள் தங்களுடைய கைக்காசை செலவு செய்து மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதில்லையே!இங்கே இருப்பதைத் தான் எடுத்துக் கொடுக்கிறார்கள்.அதற்குத் தான் சாதனை,சரித்திரம் என்ற அறைகூவல்கள்!



ஒரு குடும்பத்தலைவி உணவு சமைத்துவிட்டு நான் சமைத்தேன் இது சாதனை என்று கூறுவதும்,ஒரு பணியாளர் காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் பணியாற்றிவிட்டு நான் வேலை செய்தேன்,இது சாதனை எனக் கூறுவதும் எத்தனை அபத்தமானதோ அத்தனை அபத்தமானது ஒரு அரசியல்வாதி தனது பணியைச் செய்துவிட்டு அதனை சாதனை என்று கூறுவது!



மக்கள் நலத் திட்டங்கள் என்பவை உள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து, வெளியில் இருக்கும் பாக்கெட்டில் வைப்பது போன்றது தான்.இதில் சாதனை என்பதற்கு எந்தவிதமான இடமும் இல்லை.







ஒரு சிறந்த அரசியல் கட்சிக்கும்,அதன் தலைமைக்கும் புதுமையான சிந்தனைகளும்,புத்திசாலித்தனமான யோசனைகளும் இன்று நிச்சயம் தேவை என்பது காலத்தின் கட்டாயம்.மக்களுக்கு காலாகாலத்திற்கும் பயனளிக்கும் வகையிலான,மற்றவரால் செய்ய இயலாத மகத்தான சாதனைகளைத் தம் ஆட்சியில் ஒரு தலைவர் புரிந்துள்ளார் எனில்,அதனைச் சாதனை என்று அதனால் பயனடையும் மக்கள்தானே கூறவேண்டும்.எதிர்கால வரலாறுதானே அதைப் பற்றி பேச வேண்டும்! அப்போதுதான் அந்த இடத்தில் அரசியல் என்பது சேவைப் பணியாக இருக்கிறது என்று பொருள்.ஆனால் இன்றோ எங்கு நோக்கினும் சுய விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன.இவை அரசியலைத் தொடர்ந்து வியாபாரம் எனப் பிரகடனப்படுத்தும் விளம்பரங்களாகத்தான் தெரிகின்றன!





தேர்தல் அறிக்கைகளில் கடன் தள்ளுபடி செய்வேன்,மக்களுக்கு இவ்வளவு பணம் கொடுப்பேன் என அரசியல்வாதிகள் கூறுகிறார்களே தவிர,கடன் வாங்காத நிலையை உருவாக்க,மக்களுடைய பொருளாதார நிலையைச் செழிப்பாக்க, மக்களின் வருமானத்தை உயர்த்த, செலவுகளை குறைக்க எந்தத் திட்டமும் இல்லை.தப்பித்தவறி அவ்வாறு இருக்கக்கூடிய ஒரு சில திட்டங்கள் மக்கள் ஏற்கக்கூடிய அளவிலான, பொருளாதார ரீதியிலும்,அறிவியல் பூர்வமாகவும் சாத்தியமாகக் கூடியவையாக இல்லை!



அடிப்படைப் பொருட்களை வாங்குவதற்கு மக்களுக்கு பணம் கொடுப்பதைவிட,மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்வதே சிறந்ததொரு நிர்வாகமாக இருக்க முடியும்!



கவர்ச்சி அறிவிப்புகள் என்பவை உணவின் ஊறுகாய் போலதான் இருக்க வேண்டும்.ஊறுகாய் அளவாக இருந்தால் மட்டுமே உணவு சுவையளிக்கும்.ஆனால் இன்றைய கவர்ச்சி அறிவிப்புகள் ஊறுகாய் போன்று அமையாமல் உணவாகவே மாறி இருப்பது காலக்கொடுமை!வயிற்றுப் பசிக்கு ஊறுகாயை மட்டுமே அள்ளி அள்ளி விழுங்க முடியுமா? 



திரைப்படங்களில் வரக்கூடிய அரசியல் தொடர்பான காட்சிகளும்,நடைமுறையில் நடக்கக் கூடியவையும் ஒன்றுதானோ  எனும் காட்சிப்பிழை தோன்றும் அளவிற்கு இன்றைய அன்றாட நிகழ்வுகள் மக்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.



கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கக்கூடிய தமிழ்நாட்டை ஆட்சி செய்ய இத்தனை பேருக்கு விருப்பம் இருப்பதற்குக் காரணம்,மேலும் மேலும் கடன் வாங்குவோம்.அதில் நமக்கான ஒரு பங்கை ஒதுக்கி கொள்வோம் என்பதாகத்தானே இருக்க முடியும்.




இங்கு பல விஷயங்களை மக்கள் சுலபமாக மறந்துவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் விரும்புகின்றன.மக்களும் ஒரு சில விஷயங்களை மறந்தும் போய் விடுகிறார்கள்.


எந்த ஒரு சிறு வேலைக்கும் கூட லஞ்சம்,சிபாரிசு,ஊழல் என சமுதாய முழுக்கவே புரையோடிப் போய் கிடக்கிறது.




காந்தியடிகள் போன்றோ காமராஜர் போன்றோ ஏன் இன்றைக்கு ஒரு சிறந்த தலைவர் உருவாகவில்லை என்பது பெரும்பாலான மக்களின் ஏக்கமாக இருக்கிறது.சிறந்த தலைவர்கள் என்பவர்கள் எங்கேயோ வானத்திலிருந்து திடீரென்று குதிப்பது கிடையாது.



ஓரு இயந்திரம் பழுதாகிக் கிடக்கும்போது அதன் உற்பத்திப் பொருளை மட்டுமே குறை கூறிப் பயன் இல்லை.அவ்வாறே சமுதாயம் பழுதாகிக் கிடக்கும்போது அது உற்பத்தி செய்யும் உற்பத்தி பொருளான தலைவர்களை மட்டுமே நாம் குறை கூறுவது சரியாக இருக்காது.முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு, கண்ணாடியில் அழகாக தெரிய வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை.





ஒரு காலத்தில் அரசியல் என்பது சேவையாக இருந்தது.இருக்கக்கூடிய வளங்களை மக்களுக்கு சிறப்பாக பங்கிட்டு வழங்குவது,சமூக நீதி காப்பது, சகோதரத்துவம்,மதசார்பின்மை இறையாண்மை போன்றவை அரசாங்கங்களின் உயரிய முக்கிய கொள்கைகளாக இருந்தன.ஆனால் இன்றைய சூழலில் அரசியல் என்பது ஒரு பெரும் லாபம் அளிக்கக் கூடிய ஒரு மாபெரும் வியாபாரமாக மாறிவிட்டது.இதில் எந்த அளவு முதலீடு செய்தால்,எவ்வளவு உழைத்தால்,எத்தகைய களப்பணி ஆற்றினால் இதிலிருந்து எவ்வளவு எடுக்கலாம் என்பது பெரும்பாலான அரசியல்வாதிகளின் கொள்கைக் கணக்காக இருக்கிறது.



வெற்றி பெற்றால் ஒரு கணக்கு,தோல்வி அடைந்தாலும் தான் பெற்ற வாக்குகள் அடிப்படையில் ஒரு கணக்கு என அரசியலே ஒரு லாப நட்டக் கணக்காகவே தொடர்கிறது.

 



புதிதாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்பவர்களின் எண்ணமோ,இந்த தேர்தலில் பெறும் ஓட்டு சதவீதத்தைப் பொறுத்து அடுத்தடுத்த தேர்தல்களில் பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வளவு வசதிகளைப் பெறமுடியும் என்பதாகவே இருக்கிறது.




அரசியலைத் தொழில் எனும் தளத்திலிருந்து சேவைத் தளத்திற்கு மீண்டும் மடைமாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது.






மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடம் இருந்தும் தொடங்க வேண்டும்.அது அப்படியே பரவி சமுதாயத்தில் ஒரு இயக்கமாக மாற வேண்டும்.அப்போது தான் மிகச் சிறந்த அரசியல் தலைவர்களும்,சிறப்பான ஆட்சியும் நமக்குக் கிடைக்கும்.




நீதி,நேர்மை,நியாயம் போன்றவை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் மக்களின் வாழ்க்கையாக என்று மாறுகிறதோ அன்றுதான் அவை அரசியல் களத்திலும் பிரதிபலிக்கும். ஆட்சியாளர்களிடம் வெளிப்படும்.



தனிமனித மாற்றம் ஒன்றே இதற்குத் தீர்வாக அமையும்.தனிமனிதர்கள் இணைந்ததே சமுதாயம் ஆகும்.சமுதாய மாற்றம் ஏற்பட வேண்டுமாயின்,நல்ல ஆட்சியாளர்கள் வேண்டுமெனில்,நல்ல அரசே மக்களின் தேவையெனில்,தனி மனிதர்கள் நியாய உணர்வு கொண்டவர்களாகவும்,அதன் பயனாய் நமது சமுதாயம் ஒரு உன்னத சமுதாயமாகவும் மாறவேண்டும்.அப்போதுதான் தனிமனித ஒழுக்கமும்,நியாய உணர்வும்,திறனும் மிகுந்த சிறப்பான ஒருவர் சமுதாயத்திலிருந்து தலைவராக உருவாக வாய்ப்பு ஏற்படும்.




இன்று தமிழகம் லஞ்சம்,ஊழல் எனும் பெரும் நோய்களுடன் போராடியவாறு தேர்தலை எதிர்கொள்கிறது.இந்த நோய்களுக்கு மிகச் சிறந்த அறுவை சிகிச்சை மக்களின் மனமாற்றம் மட்டுமே.



தேர்தலில் வாக்களிக்காமல் விடுவது போரில் புறமுதுகிட்டு ஓடுவதற்கு ஒப்பான செயலாகும்.நாம் புறநானூறு தந்த வீரர்கள்.எனவே நெஞ்சுரத்துடன் வாக்களிப்போம்.வீரமும் ஈரமும் தமிழர்களின் இரண்டு கண்கள் அல்லவா!









வாக்கு என்பது மிகப்பெரிய ஆயுதம்.அதனை அற்ப காசுக்காக நாம் அடகுவைப்பது புத்திசாலித்தனம் ஆகாது.




தேர்தல் அறிக்கைகள்,கருத்துத் திணிப்புகள்,பிரச்சாரங்கள், பணப்பட்டுவாடா இவற்றையெல்லாம் தாண்டி நம் மனசாட்சிப்படி இந்த முறையாவது வாக்களிக்கத் தயாராவோம்! நல்ல ஆட்சிக்குத் தகுதியுடையவர்களாய் நம்மை மாற்றிக்கொள்வோம்.எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே மனிதனின் ஒவ்வொரு நாளும் கடக்கிறது!



- அகன் சரவணன்