Dec 31, 2023

2023 - படித்ததில் பிடித்தது

 





புத்தகம் வாசிக்க என தனியாக நேரம் ஒதுக்கவில்லை.எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் புத்தக வாசிப்பு தான்!


சிறந்த ஓய்வு என்பது ஒரு வேலைக்கு மாற்றாக வேறு வேலை செய்வது என்பர்.அதனையொற்றி ஒரு புத்தகம் சலிப்பூட்டும் போது வேறு புத்தகம் வாசிப்பது புத்தக வாசிப்பை மேலும் சுவாரஸ்யமூட்டுவதாய் மாற்றுகிறது!


நூலகங்கள்,வாடகை நூல் நிலையங்கள், புத்தகக் கண்காட்சிகள்,புத்தகக் கடைகள் இவையெல்லாம் சொர்க்கத்தின் திறவுகோல்களாகவே காட்சி தருகின்றன.


மாலைநேர மழைக்காலம்,மலை இரயிலின் சன்னலோர இருக்கை,ஒருகையில் புத்தகம்,மறுகையில் தேநீர் கோப்பை இதைவிட சொர்க்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை!




நீர்வழிப் படூஉம் புனைபோல,நூல் வழிப்படுவதாகவே வாழ்க்கை அமைந்துள்ளது.ஆனாலும் எங்கள் வீட்டினைக் கூட்டிப்பெருக்கும் போதெல்லாம் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் புத்தகங்களை சலிப்பின்றி எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டே இருக்கும் எங்கள் வீட்டுப் பெண்களுக்கு கோடானு கோடி நன்றி!




2023 இல் -படித்ததில் பிடித்த 10 புத்தகங்கள் :


1)துயில்-எஸ்.ரா


2)The Da Vinci Code-Dan Brown


3)திராவிட மாயை–சுப்பு


4)The Greek Myths- Graves


5)குரு-பாலகுமாரன்


6)வேல ராமமூர்த்தி கதைகள்


7)Ulysses-Joyce


8)ஆ-சுஜாதா


9)அறம்-ஜெமோ


10)The Star-HG Wells


-அகன் சரவணன்






Apr 23, 2023

வாசிப்போம் உலகை நேசிப்போம்!

 




அறிவு வளர்ந்து முதிர முதிர வாய் தன் வேலையைக் குறைத்துக் கொள்ளுமாம்.அந்த வகையில் அறிவை முதிரச் செய்வன புத்தகங்கள்.





லாரிபேஜ் மற்றும் செர்கிபிரின் இருவரும் இணைந்து கூகுள் நிறுவனத்தை உருவாக்கினர்.அமெரிக்க பணக்காரர்கள் வரிசையில் தற்போது இவர்கள் 9 மற்றும் 10 ஆம் இடத்தில் இருக்கிறார்கள்.இவர்கள் இருவரும் தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் (CEO) இருந்து விலகி,அனைத்துப் பொறுப்புகளையும் சுந்தர் பிச்சையிடம் கொடுத்துள்ளனர்.




சரி இனி இவர்கள் என்ன செய்யப்போகின்றனர் என்றால்,புதிய கண்டுபிடிப்பில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டி தீவிரமாக புத்தகம் வாசிக்கப் போகின்றனராம்! 

தீவிரமான புத்தக வாசிப்பின் மூலம் புதிய சிந்தனைகளையும்,அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளையும் முன்னெடுக்க உள்ளதாக மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளனர்.

கூகுள் நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்பும் இருவரும் தீவிர புத்தக வாசிப்பாளர்களே.புத்தக வாசிப்பின் மூலமே புதிய சிந்தனையைப் பெற முடியும் என்று இவர்கள்  நம்பினர்.அது கூகுளின் வளர்ச்சி மூலம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.




எல்லாவற்றுக்கும் இணையத்தையே,
குறிப்பாக கூகுளையே நம்புவோர்க்கு,புத்தக வாசிப்புதான் புதிய சிந்தனையைத் தரும் என்பதை கூகுள் நிறுவனர்கள் தங்களின் வெற்றி மூலமே நிரூபித்துள்ளனர்.அடுத்து இவர்கள் என்ன கண்டுபிடிக்கப் போகிறார்கள் என உலகமே இன்று இந்த புத்தகக் காதலர்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது.

இணைய அறிவே வேண்டாமா? என்றால் அவசியம் வேண்டும்!உணவாக அல்ல!ஊறுகாயாக!

இணையம் மூலம் நாம் அறிவது தகவல்கள் மட்டுமே.சுய சிந்தனையே கண்டுபிடிப்புகளின் தாயாகும்.அதற்கு அடித்தளமிடுபவை புத்தகங்களே.

நீங்கள் சிலநாட்களுக்கு முன் இணையம் மூலம் தேடிப் பெற்ற தகவல் தற்போது உங்களுக்கு நினைவில் இருக்காது.ஆனால் எப்போதோ சிறு வயதில் படித்தவை உங்கள் நினைவில் இருக்கும்.ஏனெனில் இணையம் தகவல்.புத்தகம் அறிவு.

அன்பு நண்பர்களே,நேரமில்லை என்று சாக்கு கூறுவதை உதறிவிட்டு புத்தகவாசிப்பின் பக்கம் உங்களின் கவனத்தைத் திருப்புங்கள்.
குழந்தைகளையும் வாசிக்க ஊக்குவியுங்கள். புத்தகங்களைக் குழந்தைகளுக்கு பரிசாகக் கொடுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு உங்களின் மிகச்சிறந்த வழிகாட்டலாக இது அமையும்.2023 ஆம் ஆண்டிற்கான உங்களின் சபதமாக இது அமையட்டும்.




அடுத்தவர் அறிவைக் கடன் வாங்கிக் கொண்டு இருக்காமல் சுயமாகச் சிந்திப்போம்.புதிய புதிய கண்டுபிடிப்புகளை நமது குழந்தைகள் உருவாக்கத் தூண்டுவோம்.

வாசிப்போம் உலகை நேசிப்போம்!

அகன்சரவணன்
9659746646