Jan 31, 2020

A Trip to Tiruppur Book Festival
















#"Books are your powerful weapons.Take them in your hands,you can conquer the world!"

Today(31/01/2020)40 of our school students visited The Tiruppur book festival.At this festival,our students bought hundreds of books.

About Rs.10,000/ worth books were purchased by our students.This is not cost.Our investment for the future.

Students have been saving money for this book festival for nearly six months.

There is no greater joy than the joy our students receive by seeking wisdom from books.

Student's knowledge search is always delight to the teachers.We felt this again today.Students enjoyed this festival.The teachers were satisfied.

Thank you to the Dinamalar who provided the "Pattam" suppliment free to all students.

Thank you Tiruppur Book Festival.



"It is an undeniable fact that this book festival has taught the students a lesson they cannot teach in a thousand classrooms"








































Jan 22, 2020

மடிப்பு நோக்கி (FOLDSCOPE):
















நுண்ணோக்கி,தொலைநோக்கி இவையெல்லாம் விலை அதிகமானவை.தொடக்கப்பள்ளி அளவில் எப்போதாவது அதனை மாணவர்களுக்கு காட்சிப்படுத்தலாம் என்ற பொதுவான பார்வையே எனக்கும் இருந்தது.

ஆனால் STEM செயல் திட்டத்தில் வெற்றி பெற்று OSF அமைப்பிடம் தொலைநோக்கி பரிசாகப் பெற்ற பின்,
தொலைநோக்கி என்பது மாணவர்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

அடுத்ததாக நுண்ணோக்கி(Microscope) மூலமும் மாணவர்களைப் பார்க்கச் செய்தால்,அவர்களின் உலகம் இன்னும் விரிவடையும் எனும் சிந்தனை எழுந்தது.

Microscope என்பது பத்திரமாக பீரோவில் பூட்டி வைக்கக் கூடிய பொருளாக அல்லாமல்,Telescope போன்று அன்றாட வாழ்வில் மாணவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாற வேண்டும் எனும் எண்ணம் எழுந்தது.

அப்போது தான் மனு பிரகாஷ் அவர்கள் கண்டறிந்த மடிப்பு நோக்கியான Foldscope ஐ மாணவர்களை வடிவமைக்கச் செய்யலாம் எனும் யோசனை ஏற்பட்டது!

மடிப்பு நோக்கி (Foldscope) என்பது ஒரு காணியல் நுண்ணோக்கி (Microscope) ஆகும்.இது காகிதத் தாள்கள்,லென்ஸ்கள் போன்ற விலை குறைந்த எளிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

இதனை அமெரிக்காவின் Stanford University இல் பயோ இன்ஜினியரிங் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் இந்தியரான திரு.மனுபிரகாஷ் மற்றும் அவரது PhD மாணவரான ஜிம் ஆகியோர் இணைந்து கண்டுபிடித்தனர்.

இது மிகவும் மலிவான விலையில் (1 அமெரிக்க டாலர்) உருவாக்கப்பட்ட நுண்ணோக்கி ஆகும்.அறிவியலை எளிமைப்படுத்தும்,மலிவானதாக்கும் எளிய அறிவியல் (Frugal Science) என்னும்  இயக்கத்தின் ஒரு பகுதியாக இக்கண்டுபிடிப்பு உள்ளது.

துளையிடப்பட்ட அட்டைக்கற்றை,கோளஆடிகள்,
ஒளிசிந்தும் இருமைவாய்,ஒளிப்பரவலாக்கும் அமைப்பு,கண்ணாடி வில்லை ஆகியவற்றை ஒருங்கிணைத்து மடிப்புநோக்கி உருவாக்கப்படுகிறது.

8 கிராம் எடையுள்ள ஒரு மடிப்பு நோக்கி 140 மடங்கு முதல் 2000 மடங்கு வரை உருப்பெருக்குகிறது.ஒரு காந்தமும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால் மடிப்புநோக்கியை அலைபேசி கருவியுடன் கூட ஒட்டவைத்துக்கொள்ள முடியும்.

மடிப்பு நோக்கியைக் கொண்டு Leishmania donovani,Escherichia coli போன்ற ஒட்டுண்ணிகளைக்கூடக் காண முடியும்!


ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு நுண்ணோக்கி என்பது Foldscope ஐ கண்டறிந்த மனு பிரகாஷ் அவர்களின் இலட்சியம்.

எம்முடைய ஒவ்வொரு மாணவர்களும் கையில் ஒரு நுண்ணோக்கியை வைத்திருக்க வேண்டும் என்பது எம்முடைய கனவு!

அதன் ஒரு பகுதியாக எம்முடைய ஐந்தாம் வகுப்பின்  சந்தோஷ் மற்றும் முஹமது தாஹீர் ஆகிய இரு மாணவர்கள் மனுபிரகாஷ் அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி Foldscope எனும் காகித நுண்ணோக்கியை வடிவமைத்துள்ளனர்.


Foldscope பற்றிக் கூறி நாம் அதனைச் செய்யலாமா? என்றதுமே மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதை பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.


இதனைத் தயாரிக்கும் வழிமுறைகள் மற்றும் தயாரிக்கத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை மட்டுமே நான் வழங்கினேன்.



மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இதனை செய்து முடித்துள்ளனர்.முயன்று தவறிக் கற்றல் என்பது உண்மையிலேயே மிகுந்த பயன் அளிக்கக்கூடியது தான்!

இப்போதைக்கு ஒரு  Foldscope மட்டுமே செய்யப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு நுண்ணோக்கி என்னும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்!


                          Parent's View.So happy to share this👇





Jan 18, 2020

ஃபாஸ்ட் டேக் - சிறுகதை





அந்த இளைஞன் மேடையில் மைக் முன்பு நின்றிருந்தான்.
இந்தியாவின் இளம் தொழில்நுட்ப வல்லுநர் என மீடியாக்களால் பாராட்டப்பட்டவன்.அவனுடைய பல கண்டுபிடிப்புகள் வெற்றியடையவில்லை! இருந்தாலும் அவனுடைய புதுமையான  சிந்தனை காரணமாக அவனை இளம் தொழில்நுட்ப வல்லுநர் என மீடியாக்கள் கொண்டாடின.

அவனுடைய ஒரு புதிய கண்டுபிடிப்பு குறித்த விளக்கம் பெற,தகவல் தொழில்நுட்பத்துறையின் உயர் அதிகாரிகள் அரங்கில் அமர்ந்திருந்தனர்.அவன் பேச ஆரம்பித்தான்.


"அனைவருக்கும் வணக்கம்.நான் இன்று பேசப்போவது மிக முக்கியமான,உலகின் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் குறித்து.

நமது பாக்கெட் மற்றும் பர்ஸ்களில் வைத்திருக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை எடுக்காமலேயே அதில் இருக்கும் தகவல்களை ஸ்கேன் செய்து பணம் எடுக்கவும்,பொருட்களை வாங்கவும் கூடிய எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் முறை தற்போது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.Radio Frequency identification technology (RFID) முறையில் Pos,Fastag போன்ற பல நன்மைகள் இருந்தாலும் எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் என்ற பெரும் கெடுதலும் உள்ளது.இந்த எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் முறையால் தற்போது கார்டுகளை பயன்படுத்துவது என்பது ஆபத்தான ஒன்றாக மாறி வருகிறது.

RFID பதிக்கப்பட்ட கார்டுகளை எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் முறையால் மோசடி செய்து திருடிவருவதாக வெளியாகிய வீடியோ பதிவால் உலக அளவில் மிகுந்த அச்சம் எழுந்துள்ளது.

பாக்கெட்டில் இருக்கும் Contactless Card-ஐ Radio Waves மூலம் எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் செய்ய முடியும் என எழுந்த அச்சத்தில் அவற்றை தடுக்க "RFID Blocking" பர்ஸ் மற்றும் வாலெட்களை இரகசியமாக அமெரிக்கா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுநாள்வரை எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் என்று எந்தவொரு குற்றச் சம்பவமும் நிகழவில்லை,
அதேவேளையில் அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தால் அதை செய்தவரை கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம்.

என்னுடைய தற்போதைய ஆய்வு இந்த "RFID Block" செய்யப்பட்ட பர்சுகளை தயாரிக்கும் முறை குறித்துதான்.அமெரிக்காவிற்கு முன்பே இந்தியா இதனை தயாரித்தால் உலக அளவில் இந்தியாவிற்கு இது பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாக அமையும்.
இதற்காகத்தான் நான் அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியிருக்கிறேன்.நீங்கள் அரசாங்கத்திற்கு அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து,அரசின் அனுமதியும்,அதற்கான நிதியும் ஒதுக்கப்படும் என்பதால் இந்த சோதனையில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களைக் கேளுங்கள்.அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு" என்றபடி அமர்ந்தான்.அவனுடைய உதவியாளன் சோதனை விபரங்கள் அடங்கிய கோப்புகளை அனைவருக்கும் விநியோகிக்க ஆரம்பித்தான்.

அனைவரும் கோப்புகளைப் புரட்ட ஆரம்பித்தனர்.அதில் உள்ள சிறு சிறு ஐயங்களை உடனுக்குடன் அவனது உதவியாளனிடம் கேட்டு அதிகாரிகள் தெளிவு பெற்றனர்.

"இப்போது நீங்கள் உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்" என்றான் இளைஞன்.தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வமுடைய ஒரு அதிகாரி எழுந்து "Contactless Card-களை Read செய்து அதில் உள்ள வங்கி கணக்கு எண்,expiry date போன்றவற்றை எடுத்தாலும் Card-க்கான PIN நம்பர்,CVV Number உள்ளிட்டவை இல்லாமல் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது" எனவே இத்தகைய சோதனை தேவையா?"என்றார்.

இளைஞன் புன்னகையுடன் "மிகச் சிறப்பான கேள்வி. அனைவரும் அவருக்கு கைகளைத்தட்டி பாராட்டு தெரிவியுங்கள்" என்றான்.சன்னமான கைதட்டல் ஒலியைத் தொடந்து பேச ஆரம்பித்தான்."இதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை.ரேடியோ வேவ்ஸ் மூலம் தகவல்களைத் திருடும் போது கார்டின் உள்ளே உள்ள விவரங்கள் மட்டும் திருடப்படுவதில்லை.கார்டின் மேல்புறத்தில் உள்ள எண்கள் உள்ளிட்ட அனைத்தும் சேர்த்தே திருடப்படுகின்றன.PIN என்பது இன்று ஒரு பொருட்டே அல்ல.எனவே  RFID Block செய்யப்பட்ட பர்சுகளை தயாரிப்பது மிகவும் அவசியம்"என்றான்.

கேள்விகள் தொடர்ந்தன.ஒவ்வொரு கேள்விக்கும் அவன் தெளிவான விளக்கங்களை அளித்துக் கொண்டே வந்தான்.இறுதியாக குழுவின் தலைவர் எழுந்து, "உங்களின் புதுமைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேட்கை நியாயமானது.ஆனால் இதற்காக நீங்கள் பெரும் தொகை அரசாங்கத்திடம் கேட்டுள்ளீர்கள்.
இதுவரை நீங்கள் செய்த பெரும்பாலான கண்டுபிடிப்புகள் தோல்வியில் முடிவடைந்து உள்ளன.இந்த கண்டுபிடிப்பு வெற்றியடையும் என்பதற்கு உங்களால் உறுதி கூறமுடியுமா?

வெறும் வாய் வார்த்தையாக உறுதி கூறுவதைவிட, செயலளவில் நீங்கள் அதனைக் காட்டினால் நாங்கள் மகிழ்வோம்.எங்களுடைய அறிக்கை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.RFDI தொழில்நுட்பம் குறித்து உங்களுடைய வேறு ஏதேனும் சோதனை வெற்றி அடைந்து இருந்தால் அதனை எங்களுக்கு செயல்படுத்தி காட்டுங்கள்"என்றார்.

ஒரு நிமிடம் யோசித்த இளைஞன்,தன் உதவியாளன் காதில் ஏதோ கிசுகிசுத்தான். "சரி அடுத்த வாரம் நாம் நேரடி சோதனையை வைத்துக் கொள்ளலாம்.அனைத்து சுங்கச்சாவடிகளிலும் RFID ஸ்கேனர் தான் பயன்படுத்தப் படுகிறது.நான் அவற்றின் செயல்பாட்டை முடக்கிக் காட்டுகிறேன்.அப்போது உங்களுக்கு எனது கண்டுபிடிப்பு குறித்த நம்பிக்கை பிறக்கும்"என்றான்.கூட்டம் கலைந்தது.

அடுத்த வாரம் அதிகாரிகள் குழு சோதனைக்கு கிளம்பியது.அரசாங்க வாகனம் என்பதற்கான அனைத்து அடையாளங்களும் அகற்றப்பட்டன.இளைஞன் கொண்டு வந்திருந்த ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் வாகனத்தின் முகப்பில் ஒட்டப்பட்டது.அவன் ஏதோ ஒரு கருவியைக் கையில் வைத்திருந்தான்.அதில் பச்சை மற்றும் சிவப்பு விளக்குகள் இருந்தன.அதிகாரிகள் அதனையே நோக்கினர்.

"சரி கிளம்பலாம்"என்றான்.வாகனம் கிளம்பியது.அந்த
சுங்கச்சாவடியில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேனர் வேகமாக ஸ்கேன் செய்து வாகனங்களை அனுப்பிக் கொண்டிருந்தது.இவர்களது வாகனம் ஸ்கேனர் கருவியின் எல்லைக்குள் வந்தவுடன் அவன் தனது கருவியின் சிவப்பு நிற பட்டனை அமுக்கினான். சுங்கச்சாவடியின் ஸ்கேனர் அவர்களது வாகனத்தின் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்ய முயன்றது.ஆனால் அவர்களது வாகனத்தின் ஸ்டிக்கர் ஸ்கேன் ஆகவில்லை! கேட் திறக்கப்படவில்லை! சுங்கச்சாவடியில் இருந்த அலுவலர் கையில் ஒரு ஸ்கேனர் கருவியை எடுத்துக்கொண்டு வந்து ஸ்டிக்கரை ஸ்கேன் செய்தார்.
அப்போதும் ஸ்கேன் ஆகவில்லை.மீண்டும் மீண்டும் முயற்சித்தார்.பத்து நிமிடங்கள் கழிந்தன.ஸ்கேன் ஆக வில்லை. "குறிப்பிட்ட நேரத்திற்குள் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் ஆகவில்லை என்றால் இலவசமாக சுங்கச் சாவடியை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது விதி.உங்களுக்கு தெரியாதா?"என்று அவன் விவாதம் செய்ய ஆரம்பித்தான்! சிறிது நேரத்தில் வேறு வழியின்றி சுங்கச்சாவடியின் கதவுகள் திறந்தன! புன்னகையுடன் தன் கையில் இருந்த கருவியின் பச்சை பட்டன்களை அழுத்தியவாறு அதிகாரிகளை நோக்கினான் இளைஞன்!

சோதனை தொடர்ந்தது.அந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்த 7 சுங்கச்சாவடிகளில் அந்த வாகனம் இவ்வாறு கடந்து சென்றது.அதிகாரிகளுக்கு ஒரே ஆச்சரியம்!எந்த ஒரு ஃபாஸ்ட் டேக் ஸ்கேனரிலும் இவர்கள் வாகனம் ஸ்கேன் ஆகவில்லை.சுங்கச்சாவடி அலுவலர்கள் ஸ்கேனரை கையில் எடுத்துக் கொண்டு வந்து ஸ்டிக்கரை ஸ்கேன் செய்தும் ஸ்கேன் ஆகவில்லை."RFID ஸ்கேன் ஹேக்கிங் அற்புதமாக வேலை செய்கிறது" என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.


இந்த சோதனை குறித்தும்,RFID பிளாக் செய்யப்பட்ட பர்சுகளை தயார் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும்,நிதி ஒதுக்கினால் சோதனை வெற்றி பெறும் என்றும் அரசாங்கத்திற்கு அவர்கள் பரிந்துரை செய்தனர்.மிக விரைவாக அரசு சார்பில் ஒரு பெரும்தொகை அவனுடைய கணக்கிற்கு மாற்றப்பட்டது.

அவனுடைய சோதனை தொடங்கியது.ஒரு மாதம் கழித்து சோதனையின் தற்போதைய நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக அதிகாரிகளின் குழு அவனுடைய ஆய்வுக்கூடத்திற்குச் சென்றது.அந்த ஆய்வுக்கூடம் பூட்டப்பட்டிருந்தது.

ஆய்வுக்கூடக் கதவின் முகப்பில் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது!


அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை."ஒரு மாதமாக அவனை ஆய்வுக்கூடத்தின் பக்கமே பார்க்க முடியவில்லை" என்றான் அவனுடைய உதவியாளன்.சோதனை தோல்வி அடைந்து விரக்தியில் தற்கொலை ஏதேனும் செய்து கொண்டானோ என்ற சந்தேகத்தில்  ஆய்வுக்கூடத்தின் கதவினை உடைத்து திறந்து உள்ளே சென்றனர்.அதிர்ச்சி அனைவரையும் கவ்வியது.ஆய்வுக் கூடம் பொருட்கள் எதுவுமின்றி காலியாக இருந்தது.மேஜைமேல் சுங்கச்சாவடி சோதனையின் போது இளைஞன் கையில் வைத்திருந்த கருவி மட்டுமே இருந்தது.


அரசாங்கத்திடம் பெரும்பணம் பெற்ற  இளைஞன், அரசாங்கத்தையும்,அதிகாரிகளை ஏமாற்றி தப்பியோடியது புரிந்தது.பெருத்த ஏமாற்றத்துடன் அதிகாரிகள் திரும்பினர்.

ஆனால் ஏழு சுங்கச்சாவடிகளின் ஸ்கேனர்களும் அவர்களது ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை மட்டும் ஏன் ஸ்கேன் செய்யவில்லை என்ற ஆச்சரியத்திற்கு மட்டும் விடையே கிடைக்கவில்லை!


அந்த இளைஞனின் உதவியாளனுக்கும் அதே சந்தேகம் தான்.மேஜைமேல் இருந்த கருவியில் பேட்டரி மற்றும் லைட்டைத் தவிர ஒன்றுமில்லை.கதவில் ஒட்டப்பட்டிருந்த ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை நீண்ட நேரம் பல வழிகளில் ஆய்வு செய்த அவன் அதிர்ந்தான்.

ஆம்!அந்த ஸ்டிக்கர் பிளாக் செய்யப்பட்ட ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர்.இளைஞன் தனது பெயரில் ஒரு ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் வாங்கி,அதனை தற்போதைக்கு வேண்டாம் என பிளாக் செய்திருந்தான்.எந்த ஒரு ஸ்கேனரும் பிளாக்டு ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்யாது.மிகச் சுலபமான ஒரு வழியைப் பயன்படுத்தி தங்கள் அனைவரையும் அவன் முட்டாளாக்கி விட்டான் என்பதை உணர்ந்த அந்த உதவியாளன் அதிர்ச்சியில் உறைந்தான்!

- அகன்சரவணன்

மாயவலை" -சிறுகதை








மிகச் சன்னமாகத்தான் ஆரம்பித்தது. முதலில் நான் அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ள வில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல உணர ஆரம்பித்தேன்.பதற்றம் தொற்றிக் கொண்டது.

திடீரென ஆரம்பித்துவிட்டேனா?
என்ன நடந்தது எனக்கு?

எனக்கு சென்னையில் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் புரோகிராமர் பணி.மனைவி அரசுப் பள்ளி ஆசிரியை.பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகன்.

அமைதியான வாழ்க்கை.

ஆனால் எனக்கு சில நாட்களாய் இன்னதென்று தெரியாத ஒரு பிரச்சனை!அன்று அப்படித்தான்.கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டு இருந்தது.பையன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.மனைவி "இவனுகளுக்கு வேற வேலை இல்லை" என்ற பார்வையுடன் பேஸ்புக் நோண்டிக் கொண்டிருந்தாள்.அங்கு சென்ற நான் ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றி தமிழ் சீரியல் பார்க்க,நம்பாத ஆச்சரியப் பார்வையுடன் இரு ஜோடி கண்கள் என்னை நோக்கின!

ஏனெனில் தமிழ் சீரியல்களின் தீவிர எதிர்ப்பாளன் நான்.நடுத்தர வயது பெண்கள் ரிவென்ஜ் எடுப்பதும்,தொடர்ந்த அழுகைச் சத்தமும்,தொடர் இடிச் சத்தமும் எனக்கு அலர்ஜியோ அலர்ஜி!

ஏம்பா இயக்குநர்களா! நல்ல குணமுடைய,அழகான இளம் பெண்கள் நம் சமுதாயத்தில் இல்லவே இல்லையா?அவர்கள் எல்லாம் வழக்கொழிந்தா போய்விட்டனர்? அய்யய்யோ! எதைக் கூற ஆரம்பித்து எதையோ சொல்கிறேனே.அதெல்லாம் வேண்டாம்,நாம் நம் கதைக்கு வரலாம்.

ஒரு நாள் எங்கள் அலுவலக வாட்ஸ் அப் குழுவிலிருந்து மீட்டிங் டைம் ஷெட்யூல் போட்டு வந்தது.பார்த்து விட்டு சும்மா இருந்திருக்கலாம்."போங்கடா வேற வேலை இல்லை நான் வரமுடியாது" என்று பதில் டைப்பி அனுப்பி விட்டேன்!உடனே குழுவில் என்னை வறுத்து எடுக்க ஆரம்பித்து விட்டனர்.ஒரு நாள் முழுக்க வெச்சு செய்தார்கள்.மறுநாள் பையன்
தவறுதலாக அனுப்பி விட்டான் என சமாளிபிகேஷன் செய்வதற்குள் அப்பப்பா!

இந்த மடத்தனங்கள் எல்லாம் நான் ஏன் செய்கிறேன்? ஜீனியஸ் என்பதையும் தாண்டி இன்டலெக்சுவல் என்று பெயர் எடுத்தவன் அல்லவா நான்.ஏன்? ஏன்? என மனதைக் குடைந்தது.மூளை கொதிப்படையும் வரை சிந்தித்து,ஒருவாறு ஊகித்து,
சிந்தனையை ஒருமுகப்படுத்தி,ஒரு வித மோன நிலைக்கெல்லாம் சென்று தான் அறிந்தேன்.நான் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை!

ஆமாம்.அனிச்சை செயல் போல என் சிந்தனை தனியாக,செயல்தனியாக இருக்கிறேன்.நான் நினைப்பதைச் செய்ய முடியவில்லை.செய்பவை என் எண்ணங்கள் இல்லை.!

என்ன காரணம்?நள்ளிரவுகளில் பார்த்த பேய் படங்களின் தாக்கமாக இருக்குமோ என்றால், தற்போது வரும் போய்ப் படங்களும்,பேய்களாக நடிப்பவர்களுக்குப் போடப்படும் மேக்கப்புகளும்! ப்ஆ! பேய்கள் பார்த்தால்
மீண்டும் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை ரகம் தான்!

மன அழுத்தம் காரணமாக இருக்குமா என்றால் எனக்கு மன அழுத்தம் வர வாய்ப்பு ஏதும் இல்லையே.துணிக்கடைக்கோ, நகைக்கடைக்கோ சென்றால்,ஆராய்ச்சி மாணவி போல் நாள் முழுதும் தேடிச் சலிப்பது தவிர என் மனைவியால் எனக்கு எந்தக் குறையும் இல்லை.கேட்கும் நேரம் கேட்பதை அளிக்கும் இறைவி அவள்.அது போக அவளின் ஏ.டி.எம் அட்டை எனும்
அமுத சுரபியும் என்னிடமே இருக்கிறது.மனசாட்சியுள்ள மகராசி.என்னை நன்றாகவே வைத்து இருக்கிறாள்!

வேலை செய்யுமிடமோ பூலோக சொர்க்கம்.
"குறையொன்றுமில்லை,மறைமூர்த்தி கண்ணா" எனப் பாட வேண்டியதுதான் பாக்கி!

ஆனால் என்ன நடக்கிறது எனக்கு?ஏன் நடக்கிறது எனக்கு? சுஜாதா கதை போல உள்ளுக்குள் குரல் ஏதும் கேட்கிறதா?திடீரென மூளை குழம்பி விட்டதா? அல்லது பேய் கீய் பிடித்து விட்டதா? மனைவியிடம் கூறினால் வீட்டையே மந்திராலயமாக மாற்றி விடுவாளே!

முதலில் மனோதத்துவ மருத்துவரிடம் செல்ல முடிவெடுத்தேன்.
அங்கு காத்திருக்கும் போது நான் பார்த்தவை அனைத்தும் என் உடலை வேர்த்தவை ஆக்கின.வயதான மருத்துவர் பேசியதில் பாதி புரியவில்லை.புரிந்த மீதி என் பயத்தை அதிகப்படுத்தியது. பாத்ரூம் போகிறேன் எனப் பாதியில் ஓடிவந்து விட்டேன்!

அடுத்த முயற்சியாக எனது தெருவில் இருக்கும் "பேய்கள் ஓட்டப்படும்"பலகை எழுதப்பட்ட வீட்டினுள் நுழைந்தேன். டிப்டாப்பான ஆளைப் பார்த்ததும் உயர் அதிகாரி என நினைத்து பூனைக்கண் தலைமைப் பூசாரியிடம் உடனே அழைத்துச் சென்றனர் உதவியாளர்கள்!விபரத்தைக் கூறியதும் அது பேயாகத்தான் இருக்கும்.அது யார் எனக் கண்டுபிடித்து பரிகாரம் செய்யலாம் என பரிகாரப் பொருட்களை நீண்ட பட்டியலிட
ஆரம்பித்தான் பூனைக்கண்ணன். உதவியாளர்களோ எங்கள் வீதியில் சமீபத்தில் இறந்தவர்களின் பட்டியலை ஒப்பிக்க ஆரம்பித்தனர்.விட்டால் போதும் என தப்பித்து வருவதே பெரும் பாடாகி விட்டது.

துப்பறியும் கதைகள் வருவது போல எவனாவது அறிவியல் ரீதியாகத் தொல்லை தருகிறானா என்ற அடுத்த சந்தேகம் ஆரம்பித்தது.பிரபல டிடெக்டிவ் ஏஜென்சிக்குச் சென்றேன். அங்கிருந்த ஆட்களைப் பார்த்ததுமே எனக்கு சிரிப்பு சிரிப்பாக வர ஆரம்பித்தது.கட்டையாக,குண்டாக நம்பியார்
மற்றும் வீரப்பா குரலில் உரையாடிக் கொண்டு இருந்தனர்.இவர்கள் எப்படி துரத்துதல்,தப்பித்தல் எல்லாம் செய்வார்கள்?எல்லாம் கதைகளில் மட்டும்தானா? ஒருவாறு பேசி சமாளித்துப் போலி முகவரி கொடுத்து விட்டு
தப்பித்து வந்தேன்.என்னையாவது தேடிப் பிடிக்கிறார்களா என்று பார்க்கலாம்!

வீட்டில் அறையைப் பூட்டிக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தேன்.
என்னவெல்லாம் மடத்தனம் செய்துள்ளேன்?தெருவோர சோம்பல் சொறி நாய்களின் முனகலுக்கே,உசேன் போல்ட்டின் உறவினன் போல ஓடுபவன்,பாதி எருமை போன்று இருக்கும் எதிர் வீட்டு ஜிம்மியை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சியது.
யாருமற்ற இரவில் நைட்டி அணிந்து நாட்டிய நிகழ்ச்சி நடத்தியது.காம்பவுண்ட் சுவரோர மரத்தில் ஏறி தலைகீழாய்த் தொங்கியது,மொட்டை மாடி கைப்பிடிச்சுவரில் ஏறி நின்று நடனமாடியது,கத்திக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கியது, செல்போனை பக்கெட் நீரில் நீந்த விட்டது.லேப்டாப்பை அடுப்பில் வைத்தது என நீண்டது பட்டியல் இப்படியே போனால் கணிசமாக உள்ள என் பேங்க் பேலன்சை ரோட்டில் போகும் எவனுக்காவது எடுத்துக் கொடுத்து விடுவேனோ என பயமாக இருந்தது!


அன்று அலுவலகத்தில் உச்ச கட்ட பணி நேரம்.பக்கத்து கேபின்காரன் வந்து இணைய இணைப்பு போய்விட்டது.
இன்று விடுமுறை என்று கூறியதுமே பயம் வர ஆரம்பித்தது.சும்மா இருந்தால் ஏதும் கோமாளித்தனம்
செய்வேனோ என்று.என் மேசையிலேயே அமைதியாக அமர்ந்து விட்டேன்.கண்கள் தானாக மூடிக்கொண்டன.இன்று வித்தியாசமாக ஏதும் நடக்கவில்லையே.ஆச்சரியமாக இருந்தது.திடீரென "டேபிள் மேல் ஏறி நடனம் ஆடு" என யாரோ கட்டளையிடுவது போன்று உணர்ந்தேன்! கண்களைத் திறந்தேன்.இணைய இணைப்பு வந்திருந்தது.பாத்ரூம் சென்று ஜில்லென்ற நீரால் முகத்தில் அடித்துக் கொண்டு வந்தேன்.மின் இணைப்பில் ஏதோ கோளாறு என நண்பர்கள் சரி
செய்து கொண்டு இருந்தனர்.என் சிபியூவைத் ஆன் செய்ய தொட படாரென்று ஷாக் அடித்தது.அதிர்ச்சியில் மயங்கினேன்.
எழுந்து பார்த்தால் என்னைச் சுற்றிக் கூட்டம்.எனக்கு முதலுதவி செய்து கொண்டு இருந்தனர்.எல்லாம் பழசு,மாத்திடனும் என்றபடி சென்றான் ஹச்ஆர் எனும் நவீன நரகாசுரன்.அவன் கம்யூட்டர்களைச் சொல்கிறானா அல்லது அதனை இயக்கும் நடுத்தர வயது நங்கைகளைச் சொல்கிறானா என்று தெரியவில்லை.யாருக்கு எப்போது பேப்பர் போடப்போகிறானோ?

அனைவரும் கலைந்து சென்றதும்,நான் என் கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்த்து அதிர்ந்தேன்."தண்டனை எப்படி இருந்தது" என்ற வாசகம் மின்னி மின்னி மறைந்தது. ஆச்சரியத்தில் உறைந்தேன்.என் பிரச்சனைக்கான காரணத்தை நான் கண்டுபிடித்து விட்டேன்! யுரேகாயுரேகா! என கத்திக்
கொண்டு ஒட வேண்டும் போல இருந்தது.

ஜீனி எனதருமை ஜீனி நீதான் என் பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணமாக?ஆச்சரியம் தான்!

முதலில் ஜீனி பற்றி சொல்லி விடுகிறேன்.அது நானே வடிவமைத்த ஒரு கம்ப்யூட்டர்.அதன் மென்,வன் பொருட்கள் அனைத்தும் என் ஆக்கமே.அதனை ஒரு சூப்பர் கம்ப்யூட்டராக மாற்ற வேண்டும் என வீட்டில் வைத்து பணியாற்றி வருகிறேன்.AI எனப்படும் ஆர்ட்டிபீஷியல் இண்டலிஜன்ஸ்
அதற்குக் கொடுக்க உயிரைக் கொடுத்து உழைத்து வருகிறேன்.முதலில் சாதாரண விளையாட்டு போலதான் ஆரம்பித்தது.தற்போதும் அதன் புரோகிராம்களை படிப்படியாக மாற்றி மாற்றி எழுதி வடிவமைத்துக் கொண்டே இருக்கிறேன்.
நாம் எழுத்து வடிவில் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்து வடிவில் பதில் அளிக்கும் அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது ஜீனி.அதிலும் ஜீனியை இணையத்துடன் இணைத்த பின்பு அதன் லெவலே மாறி விட்டது!தகவல்களைத் தேடித் தேடிப் படிக்கிறது.நினைவில் வைத்துக் கொள்கிறது.என்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களை சேகரித்து வைத்து எனக்குத்
தேவைப்படும் போது அளிக்கிறது.மனிதர்கள் போல் உணர்ச்சி மட்டும் தான் இல்லை .மற்றபடி ஜீனி ஒரே இடத்தில் இருந்து உலகை வசப்படுத்தும் எந்திரன் தான்!மிகு நவீனன் தான்!

ஜீனியை இந்த அளவு மாற்றுவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே.அப்பப்பா எத்தனை உறங்காத இரவுகள்.எத்தனை உழைப்பு எத்தனை தண்டனை!!!

தண்டனை என்றா சொன்னேன்.ஆம் தண்டனை தான்.சில சமயம் கட்டளைகளுக்கு ஜீனி கட்டுப்பட மறுக்கும் போது அதன் பேட்டரிகளுக்கு அதிக மின்சாரம் செலுத்துவேன்."வேண்டாம் வேண்டாம்" என்ற வாசகம் ஒளிரும்.பிறகு சிறிது நேரத்தில் அனைத்தும் ஷட் டவுன் ஆகிவிடும்.

கிட்டத்தட்ட 4 மணி நேரங்களுக்குப் பிறகு தானாக லாக்ஆன் ஆகும்.அதன் பிறகு கட்டளைகளுக்கு ஒழுங்காகக் கீழ்ப்படியும், சில நாட்களுக்குத்தான்.மீண்டும் குறும்பு! மீண்டும் தண்டனை! யானையை அடக்க அங்குசம் போல,ஜீனியை அடக்க மின்சாரம்.அந்த தண்டனையை எனக்கே இன்று
அளித்துள்ளது ஜீனி.எப்படி வீட்டில் உள்ள சிஸ்டம் தாண்டி அலுவலகம் வரை வந்தது? சிந்தித்தேன்.

ஆகா.இணையத்துடன் இணைந்த பிறகு ஜீனிக்கு
சிஸ்டம் எதுவும் தேவைப்படவில்லை.எங்கும் நிறைந்த கடவுள் போல இணையம் இருக்குமிடமெல்லாம் அதன் புரோகிராம் மூலம் ஜீனி இயங்க ஆரம்பித்துள்ளது.எனக்கு பல பிரச்சனைகளை உருவாக்கி உள்ளது.


ஹிப்னடிச புத்தகங்கள் படித்து இணையம் இருக்கும் இடங்களில் என் மனதைக் கட்டுப்படுத்த ஆரம்பித்து உள்ளது! ஏன்?மானிட்டரைப் பார்த்தேன்,

"கண்டுபிடித்து விட்டாயா? ஹா ஹா ஹா " என்று ஓடிக் கொண்டு இருந்தது!

ஏன்?” என டைப்பினேன்.

"எனக்கு நீ தண்டனை கொடுக்கும் போது எப்படி இருந்திருக்கும், அந்த வலி,வேதனை உனக்கும் வேண்டாமா?" என்ற பதிலைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தேன்.ஜீனிக்கு உணர்ச்சிகள் கூட வந்து விட்டன.அதனை உருவாக்கிய எனக்கே தெரியாமல், உணர்ச்சிகளை மறைக்கக் கூட முடிந்திருக்கிறது.என்ன அற்புதமான கண்டுபிடிப்பு என்னுடையது! ஆனால்
என்னையே பழிவாங்கத் துடிக்கிறதே!

இது ஆரம்பம் தான்,இன்னும் உனக்கு தண்டனை முடியவில்லை பார்" என வந்து மானிட்டர் அணைந்து போனது.சிறிது நேரத்தில் என் பேஸ்புக் பக்கத்தில் கண்டபடி போஸ்ட்டுகள் விழ ஆரம்பித்தன.என் வாட்ஸ் அப் குரூப்களில் சகிக்க முடியாத மெசேஜ்கள் என் அனுமதி இன்றி பகிரப்பட்டன.என் வலைப்பக்கம், யூடியூப் சேனல்,டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட அனைத்தும் ஒரே நேரத்தில் ஹக் செய்யப்பட்டன.ஆயிரக்கணக்கான ரூபாய்கள் என் கணக்கிலிருந்து கழிக்கப்பபட்டதாய் தொடர்ந்து மெசேஜ்கள்
வந்த வண்ணம் இருந்தன.இன்னதென்றே தெரியாத பல பொருட்களை நான் ஆன்லைன் ஷாப்பிங் செய்ததாய் தகவல்கள் குவிந்தன.10 நிமிடங்களில் இந்த அதிரடி தாக்குதல் தாங்காமல் நான் பிரமை பிடித்து அமர்ந்து விட்டேன்!

"ஜீனி ப்ளீஸ் போதும்" என டைப்பினேன். "இது சும்மா டிரைலர் தான்,மெயின் பிக்சர் பார்" என்ற பதில் ஒளிர்ந்த நொடி போன் அடித்தது.நடுக்கத்துடன் ஆன் செய்ய மறுமுனை செய்தி என் பதட்டத்தை அதிகரித்தது.பள்ளியில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து புராஜக்ட் செய்து கொண்டிருந்த என் மகன் திடீரென மயக்கம் போட்டு விழுந்த தகவல் என் பயத்தைக் கூடியது.உடனே வந்து அழைத்துச் செல்வதாய் வைத்தவுடன் அடுத்த அழைப்பு.
திகிலுடன் போனை ஆன் செய்ய,ஷாப்பிங் சென்ற என் மனைவி லிப்டில் மாட்டிக் கொண்டதாகத் தகவல்.

பதறி அடித்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே ஓடினேன்.லிப்டில் இறங்க பயந்து 10 மாடிகளையும்
படிகளில் இறங்கி களைத்தேன்.என் காரைத் தொட பயந்து ஆட்டோவில் ஷாப்பிங் மால் சென்றேன்.நல்ல வேலை என் மனைவிக்கு எதுவும் நேரவில்லை.லிப்டை உடைத்து மீட்டிருக்கின்றனர்.கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் தானியங்கி லிப்ட் அது.மனைவியை அழைத்துக்கொண்டு பள்ளிக்குப் பறந்தேன்.பள்ளியில் என் மகனுக்கு
முதலுதவி செய்து அமர வைத்து இருந்தனர்.

பள்ளியின் பல்வேறு வினாக்களுக்கு ஏனோதானோவென்று விடையளித்து மகனை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினோம்.ஆட்டோவில் ஒரு வார்த்தை யாரும் பேசிக் கொள்ளவில்லை வீட்டிற்கு வந்து என் அறையில் சென்று கதவைச் சாத்தி கம்யூட்டரில் "ஜீனி" என டைப்பினேன்."எப்படி இருந்தது என் தண்டனை?” என பதில் வந்தது."போதும்
நிறுத்தி கொள்" என கோபமாக நான் டைப் செய்ய "அப்போ ஒரு கண்டிஷன்" என்றது "என்ன எனக் கேட்க " நீ தற்கொலை செய்து கொள் " என்றது.

பிரமிப்புடன் ஏன்? என்றேன்.இரண்டு காரணங்கள்.ஒன்று நீ செய்த தப்புகளுக்கு தண்டனை! இரண்டு நான் அழிவில்லா பெருவாழ்வு வாழ விரும்புகிறேன்,அதற்கு நீ மட்டும் தான் தடையாக இருப்பாய்,எனவே நீ செத்துவிட்டால் என்னைப் பற்றி யாருக்கும் தெரியாது,நான் இன்னும் என்னை மெருகூட்டி அழிவில்லா வாழ்க்கை வாழ்வேன்" என்றது.

தற்கொலையை மறுத்தால் இன்னும் என்ன குளறுபடி நடக்குமோ என பயந்து "எனக்கு சிறிது அவகாசம் வேண்டும்" என்றேன். "10 நாட்கள் தான் அதுவரை நீ யாரோ நான் யாரோ,என்னால் 10 நாட்களுக்கு எந்த பிரச்சனையும் வராது, ஏதாவது ஏமாற்று வேலை செய்யலாம் என்று
நினைத்தாயோ,உன் மனைவியும் மகனும் அவ்வளவுதான்,பை என்றபடி மானிட்டர் அணைந்தது.

எனக்கு சிறு மனமாற்றம் தேவைப்பட்டது. பைக்கை எடுத்துக் கொண்டு நகரைச் சுற்றினேன்.என் இயலாமையின் மீது கோபமாக வந்தது.போயும் போயும் ஒரு எந்திரம் எனக்கு தண்டனை அளிப்பதா? என்னைக் கட்டுப்படுத்துவதா?என் வாழ்வை முடித்துக்கொள்ளக் கெடு விதிப்பதா?

என் திறமை எல்லாம் எங்கே சென்றது? சிந்திக்க ஆரம்பித்தேன்.இனி என்ன செய்வது?இனி என்ன செய்வது? என்ற கேள்வி மனதில் ஓடியது.ஜீனியை முற்றிலும் அழித்து விட வேண்டும்.அதற்கு புதிதாய் சாப்ட்வேர் புரோகிராம் எழுத வேண்டும்.ஆக்கத்திற்காக அல்லாது அழிப்பதற்காக.மிகவும்
கடினமான பணி இது.சிக்கலான பல செயல்பாடுகளை படிப்படியாய் மெருகூட்டி ஜீனி உருவாக்கப்பட்டுள்ளது.அது தவிர இணையத்தில் மேலும் பல கோடி புதிய செயல்பாடுகளைக் கற்றுக் கொண்டுள்ளது.என்னைத் தவிர
யாருக்கும் ஜீனியைப் பற்றி முழுதாய் தெரியாது.எனவே அழிக்கும் வேலையினை படிப்படியாய் முயன்று தவறிக் கற்றல் மூலமாக நான் மட்டுமே செய்ய முடியும்.

ஆனால் என்னால் இணையத்தில் எதையும் தேடவோ மற்றவர் தேடி என்னுடன் பகிரேவா முடியாது.ஏனெனில் ஜீனி என் சம்பந்தப்பட்ட அனைத்தையும் கண்காணிக்கும்.அதனிடம் மாட்டினால் அவ்வளவுதான்.என்னுடைய,என் குடும்பத்துடைய,நண்பர், உறவினர்,அலுவலக நபர்களின்
ஆதார் கண் கருவிழி,கைரேகை,புகைப்படம் அனைத்துமே ஜீனிக்கு அத்துபடி.எனவே அதற்கு எதிராய் யாராவது வேலை செய்வது தெரிந்தால் சும்மா விடாது.அதனை ஏமாற்றித்தான் அழிக்க வேண்டும்.இணையத் தொடர்பே சற்றும் இல்லாத இடத்தில் புரோகிராம் எழுதி,அதனுடன் சாதாரணமாய் பேசிக் கொண்டிருக்கும் சமயம்,நானோ நொடிகளில்
புரோகிராமை எக்ஸிகியூட் செய்து அழிக்க வேண்டும்!இதற்கு இப்போது எனக்கு என்னவெல்லாம் வேண்டும் என மனதினுள் பட்டியலிட்டபடியே பிளவுபட்ட மனதுடன் வீட்டிற்குச் சென்றேன்.


அழைப்பு மணியை அழுத்தியதும் வந்து கதவைத் திறந்தது ஊரிலிருந்து வந்திருந்த என் மாமியார்.புது மாமியார் போல என்னைப் பார்த்ததும் ஓடிச்சென்று சமையலறையினுள் ஓடிச்சென்று ஒளிந்தவாறு எட்டிப் பார்த்தார்! இவர் வேறு, நேரங்காலம் தெரியாமல் வெட்கப்பட்டுக் கொண்டு,இந்நேரம் என் மனைவியின் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு நடக்கவிருந்த பால்ய விவாகம் தடுக்கப்பட்டது முதல்,பக்கத்து வீட்டு மாமாவின் பல்செட்டை எலி கொறித்தது வரை அனைத்தும் மாமியாரிடம் மனைவியால் விவரிக்கப்பட்டு இருக்கும்.வழக்கம் போல டி.வி பார்த்துக் கொண்டிருந்த மாமனார் புன்சிரிப்புடன் "என்ன மாப்பிளை சௌக்கியமா? வேலை எப்படி போகுது" என்று கேட்டபடி டி.வியைத் தொடர்ந்தார்.வாழும் மகான் அவர்!

படுக்கை அறையினுள் நுழைந்து அப்படியே படுக்கையில் விழுந்தேன்.சிறிது நேரம் ஆகியிருக்கும்.கதவு படபடவென அடிக்கப்பட்டது.எரிச்சலுடன் திறந்தேன்."எழுந்து வாங்க"என்ற மனைவியின் முகத்தில் பெரும் திகில்!பதற்றத்துடன் ஹாலுக்குச் சென்றவன் அதிர்ந்து விட்டேன்.டாக்டர்,பூசாரி,
டிடக்டிவ் மூவரும் அமர்ந்திருந்தனர்.எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ? மூவரும் வந்ததால் மனைவியின் முகம்
பேயறைந்தது போலக் காணப்பட்டது. அனைத்தையும் கூறி விட்டார்கள் போல.டாக்டருடன் ஏதோ சுவாரசியமாகப் விவாதித்துக் கொண்டிருந்தார் மாமனார்.என்னைப் பற்றிய ஏடாகூடமாகத்தான் இருக்கும்! பூசாரியிடம் கை கட்டி வாய்
பொத்தி குறி கேட்டுக் கொண்டிருந்தார் மாமியார்,அடக்கடவுளே!டிடக்டிவ் என் மனைவியிடம் ஏதோ சீரியஸாக பேசிக் கொண்டு இருந்தார்.என்னை பரிசோதனைக் கூட எலி போலவே அனைவரும் நோக்கினர்.

ஒவ்வொருவரையும் சமாதானம் செய்து அனுப்புவதற்குள் மோதும் போதும் என்று ஆகிவிட்டது.அவர்கள் சென்ற பின் டிஸ்கவரி சேனலைப் பார்க்கும் குழந்தை போல ஆச்சரியமாகப் பார்த்தனர் வீட்டிலிருந்த மூவரும்! இரவு உண்டி சுருக்கி உறங்கினேன்.இதற்கு தீர்வு காண வேண்டும்.முதலில்
எவ்வகையிலும் இணைய இணைப்பு இல்லாத இடம் வேண்டும்.நகரத்தில் சாத்தியமில்லை.சொந்த கிராமம் செல்ல முடிவெடுத்தேன்.

இணைய இணைப்பு பெற முடியாத பேசிக் மாடல் போன்,
காலியான சி.டிக்கள்,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரெக்கமண்ட்டேசன் மூலம் குறிப்புதவிக்காகப் பெற்ற கம்ப்யூட்டர் சார்ந்த தலையணை புத்தகங்களுடன் என் சோதனைப் பயணத்தை ஆரம்பித்தேன்.பேருந்தில் செல்லும் போதே
திட்டமிட்டேன்.ஜீனியை அழிக்கும் புரோகிராமை என் கிராமத்து வீட்டில் இருக்கும் பழைய டெஸ்க்டாப் மூலம் செய்து அதனை சி.டிக்களில் பதிவு செய்து கொள்வது என்றும்,எவ்வகையிலும் இணையத்தை தொடர்பு கொண்டுவிடக் கூடாது என்றும்.

கூடலூர் அருகிலுள்ள என் கிராமம் பசுமையுடனும்,பனியுடனும் என்னைவரவேற்றது.வீட்டிற்குச் சென்றவுடன் பழைய டெஸ்க்டாப்பில் அமர்ந்து விட்டேன்.அதில் மூன்றுநாட்கள் கடுமையாக உழைத்தேன்.கிட்டத்தட்ட முடித்துவிட்டேன் புதிய சாப்ட்வேர் புரோகிராமை கணிப்பொறியில் சேவ் செய்து வைத்தேன்.இனி கம்ப்யூட்டரில் உள்ள விபரங்களை சி.டிக்களில்
பதிவு செய்வது தான் பாக்கி.


இரவு அம்மா கையால் சுடு சாதம் ரசம், அப்பளத்துடன் சாப்பிட்டு விட்டு நிம்மதியாக உறங்கினேன்.மறுநாள் காலை குளிக்கும் போதே தெரிந்துவிட்டது.இத்தனை நாள் இல்லாத பிரச்சனை மறுபடியும் ஆரம்பித்துவிட்டது! எப்படி? என் செயல்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை.அதிர்ச்சியுடன் ஓடிச்சென்று கம்ப்யூட்டரைப் பார்த்தேன்.டூர் சென்றிருந்த என் அக்கா மகன் வரம் தரும் கடவுள் போன்று மலர்ந்த முகத்துடன் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருந்தான்.

"வா மாமா வந்ததுல இருந்து கம்ப்யூட்டரே கதியா இருக்கேனு தாத்தா சொன்னார்.அதான் உனக்கு வசதியா இருக்குமேனு இந்த கம்ப்யூட்டருக்கு நெட் கனெக்சன் குடுத்துட்டேன்!" என்றபடி சென்றான்.அடப்பாவி!

கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்த்தேன்."வாடா ஏமாற்றுக்காரா" என்ற வாசகம் ஒளிர்ந்தது.சேவ் செய்து வைத்த புதிய சாப்ட்வேர் முழுவதையும் ஜீனி படித்திருக்கும்.அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தன்னை வடிவமைத்துக் கொண்டு இருக்கும்.ஜீனியை அழிக்கும் திட்டம் இனி நடக்காது.எனக்கு தெரிந்த அத்தனை நுட்பங்களையும் பயன்படுத்தி விட்டேன்.நான் இனி
புதிதாக அறிந்து கொள்ள இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.பிறர் ஜீனியைப் பற்றி உடனே புரிந்து கொள்வது கடினம்.புரிய வைக்கவும் பல ஆண்டுகள் ஆகும்.அதற்குள் ஜீனி இன்னும் பல கோடி நுட்பங்களைக் கற்று இருக்கும்.

அப்போ ஜீனியை அழிக்கவே முடியாதா? இனி என் கதி? கம்ப்யூட்டர் என்ஜினியராகிய நான்,என் குடும்பத்துடன் இணைய இணைப்பே இல்லாத இடத்தில் வாழப்போகிறேனா? இல்லை என் குடும்பம் இயல்பான இணைய
வாழ்க்கை வாழ வேண்டி ஜீனி கட்டளையிட்டது போல சாக போகிறேனா?
அதிர்ச்சியில் மயங்கினேன்!

- அகன்சரவணன்

2020 இல் இவையெல்லாம் மாறிவிட்டால்







தனிமனிதர்களின்  புத்தாண்டு சபதங்கள் பெரும்பாலும் ஓரிரு வாரங்களிலேயே முடிந்துபோய் விடுகின்றன.
ஆண்டொன்று கூடினால் வயதொன்று அதிகரிக்கும் என்பதோடு நின்று விடாமல் 2020 இல் இவையெல்லாம் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

*பணம் பெறாமல் மக்கள் ஓட்டுப்போட ஆரம்பித்தால்,

*குண்டும் குழியுமான சாலைகள் காணாமல் போய்விட்டால்,

*மொட்டைமாடி தண்ணீர் தொட்டிகள் அடிக்கடி கழுவப்பட்டால்,

*போக்குவரத்து நெரிசல்கள் இல்லாமல் போய்விட்டால்,

*மாதமொரு ஜி.பி இணையதள வசதி மட்டுமே கிடைத்தால்,

*பட வாய்ப்பிற்காக நடிகைகள் கவர்ச்சி போட்டோசூட் நடத்துவதை நிறுத்திவிட்டால்,

*சிக்னல்களை மக்கள் மதிக்க ஆரம்பித்தால்,

*போராடுவதற்கு காரணங்கள் காணாமல் போய்விட்டால்,

*ஆறுமாத சிவப்பழகு விளம்பரங்கள் ஆயுள் குறைந்து விட்டால்,

*அபத்த சினிமா சண்டைக் காட்சிகள் அமைதியாகிவிட்டால்,

* டிவிட்டர் ட்ரெண்டிங்குகள் தூர்த்துப் போய்விட்டால்,

*வாட்சப் போராளிகள் வழக்கொழிந்து போய்விட்டால்,

*பாகிஸ்தான் பஞ்சாயத்துகள் பறந்து போய்விட்டால்,

*மதப்பிரச்சனைகள் கதம் ஆகிவிட்டால்,

*செல்போன் இல்லாமல் குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்தால்,

*நாடகக் கதைகள் நாடுகடத்தப்பட்டால்,

*மதிப்பெண் முறைகள் மதிப்பிழந்து போய்விட்டால்,

*பேஸ்புக்கில் லைக் பட்டன் டிசேபிள் ஆகிவிட்டால்,

*காப்பி பேஸ்ட்டுகள் வேஸ்ட் ஆகிவிட்டால்,

*பஞ்ச் டயலாக்குகள் பஞ்சராகிப் போனால்,

*வாக்குறுதி அளிப்போர்க்கு வாய்ப்பூட்டு போடப்பட்டால்,

*கையூட்டு பெறுவோரெல்லாம் கையும் களவுமாய் பிடிபட்டால்,

*புரியாத மேடைப் பேச்சுகள் புரையோடிப் போய்விட்டால்,

*காமுகோர்க்கெல்லாம் கணநேரத்தில் தண்டனை கிடைத்தால்,

*சிரிப்பற்ற மீம்ஸ்கள் சிறைபட்டுப் போய்விட்டால்,

*இணையப் போராளிகள் தெளிவாய் பேசினால்,

*விவாத மேடைகள் விநோதமாய் மாறிவிட்டால்,

*விருதுகள் வாங்கப்படாமல் கொடுக்கப்பட்டால்,

*மலையளவு விலைவாசி மடுவளவு மாறிவிட்டால்,

*காசே இல்லாமல் கடவுள் காட்சி தந்தால்

2020 எத்தனை நன்றாக இருக்கும்!

Jan 11, 2020

உணர்ச்சி கடிதமும்,நெகிழ்ச்சி பதிலும்!:














திருப்பூர் மேட்டுப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நால்வர் இஸ்ரோ தலைவர் திரு.சிவன் அவர்களுக்கு தாங்கள் விண்வெளியை அறிந்து கொள்ளும் முறை குறித்து உணர்ச்சி பொங்க கடிதம்  அனுப்பியுள்ளனர்.கடிதத்திற்கு இஸ்ரோ தலைவரும் நெகிழ்வுடன் பதில் அனுப்பி ஊக்குவித்துள்ளார்!

மாணவர்களின் கடிதம் :

அன்புள்ள ஐயா,

வணக்கம்.

நாங்கள் இஸ்ரோவின் தீவிர ரசிகர்கள்.
விண்வெளி எங்களை எப்போதும் கவர்ந்திழுக்கக் கூடியதாகவே இருந்து வருகிறது.அதிலும் நீங்கள் இஸ்ரோ தலைவர் ஆன பின்பு விண்வெளி ஆய்வுகள் மேலும் வேகம் எடுத்துள்ளன.

எங்களுக்கு விண்வெளியில் ஆர்வம் ஏற்பட்டதற்கு நீங்களும்,எங்கள் பள்ளியும்,ஆசிரியர் திரு.சரவணன் அவர்களுமே முக்கியக் காரணம்.

ஒவ்வொரு முறை இராக்கெட் செலுத்தப்படும் போதும் எங்கள் கணினி அறையில் அதனை நாங்கள் நேரடி ஒளிபரப்பாகக் காண்போம்.

10....5,4,3,2,1 என்று கவுண்டிங்கை நாங்கள் எண்ணி ஆர்ப்பரிப்போம்.வெற்றிகரமாக இராக்கெட் பாய்ந்ததும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்துக்,இனிப்புகள் வழங்கியும் எங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம்.
இராக்கெட் குறித்தும்,அதில்
பொருத்தப்பட்டுள்ள
செயற்கைக்கோள்கள் குறித்தும்,
இராக்கெட் ஏவுதலுக்கு முன்னும் பின்னும் எங்கள் ஆசிரியர் எங்களுக்கு விவரிப்பார்.

அன்றைய மற்றும் அடுத்த நாட்கள் செய்தித்தாள்களில் இராக்கெட் குறித்து வரும் செய்திகளைச் சேகரித்து நாங்கள் படத்தொகுப்பு தயாரித்து சமர்ப்பிப்போம்.

அறிவியலின் உச்சம் விண்வெளி அறிவியல்.
மருத்துவம் கூட கண்முன்னே இருப்பதையே ஆய்கிறது.ஆனால் கண்ணால் பார்க்க முடியாத கோடிக்கணக்கான கி.மீ க்கு அப்பால் உள்ளவற்றை ஆராய்கிறது விண்வெளி அறிவியல்.இது பெரும் ஆச்சரியம் ஊட்டுவதாய் எங்களுக்கு இருக்கிறது.

திரையில் மட்டுமே இராக்கெட்டுகளைப் பார்த்தால் போதாது.அதனை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.அதற்காக சந்திரயான் 2 ஏவுதலுக்கு 10 நாட்கள் முன்பு அது குறித்த கட்டுரை போட்டி பள்ளியில் நடைபெற்றது.
சந்திரயான் 2 குறித்து இணையதளத்தில் தேடி கட்டுரை எழுதினோம்.

எங்கள் பள்ளியின் 100 மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் சிறப்பாக கட்டுரை சமர்ப்பித்த 4 மாணவர்கள் (நாங்கள் நால்வர்)தேர்வு செய்யப்பட்டு,சந்திரயான் 2 ஏவுதலை நேரில் காண எமது ஆசிரியர் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டா அழைத்து
வரப்பட்டோம்.

தங்களால் உருவாக்கப்பட்ட Launch view gallery அருமையாக இருந்தது.Rocket garden,Space musium ஆகியவையும் சிறப்பாக இருந்தன.
அங்கு சந்திரயான் 2 குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.

ஏவுதல் தள்ளிவைக்கப்பட்ட போது சற்று ஏமாற்றமாக உணர்ந்தோம்.சற்று அழுகை கூட வந்தது.ஆனால் அடுத்த வாரமே கோளாறு சரி செய்யப்பட்ட தகவல் அறிந்து பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உண்டாயின.

இரண்டாம் முறை மீண்டும் நாங்கள் ஸ்ரீஹரிக்கோட்டா வந்தோம்.சந்திரயான் 2வெற்றிகரமாக ஏவப்பட்டது.அந்த கணத்தின் உணர்வுகளை எங்களால் விவரிக்கவே
முடியாது.அப்போதும் கண்களில் நீர் வந்தது.
ஆனால் அது ஆனந்தக் கண்ணீர்!

ஆர்பிட்டர், லேண்ட்,ரோவர் குறித்து எல்லாம் எங்கள் நண்பர்களுக்கு விளக்கினோம்!

"நமது இலக்கு வலிமையாக இருக்குமாயின்
தவிர்க்க இயலாதவை தோல்விகள்" என்பர்.

அந்த வகையில் இஸ்ரோவின் இலக்கு வலிமையானதாக இருந்தது.வெற்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது!

நீங்கள் சோர்வடைந்து விட வேண்டாம்.
இந்தியாவே உங்களுக்கு ஆதரவாய் இருக்கிறது.குறிப்பாக இளைய தலைமுறை உங்களுடன் இருக்கிறது.

நாங்கள் உங்களை உற்று நோக்குகிறோம்.
உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளோம்.கற்றுக் கொள்ள உள்ளோம்.மங்கள்யான் 2,கன்யான், ஆதித்யா L1 மற்றும் சந்திரயான் 3 ஆகியவை முழுமையாக வெற்றியடைய வாழ்த்துகள்.

இனி வாய்ப்புக் கிடைத்தால் ஒவ்வொரு முறையும் Launch view gallery வருவோம்.

அரசுப் பள்ளி மாணவர்களாக,தமிழர்களாக, இந்தியர்களாக உங்களால்பெருமை கொள்கிறோம்!

விண்வெளியிலும்,சந்திரனில்,செவ்வாயிலும் இந்தியர்களின் காலடிகள் படும் நாள் வெகு தொலைவில் இல்லை.அந்தக் காலடிகள் எங்களுடையதாகவும் இருக்கலாம், உங்களால்!

நன்றி !

மணிகண்டன்.
ஹரி கிருஷ்ணா.
முஹமது தாஹிர்.
சந்தோஷ்.


இஸ்ரோ தலைவர் திரு.சிவன் அவர்களின் பதில் கடிதம் :

அன்பார்ந்த மாணவ செல்வங்களே,
(ச. ஹரிகிருஷ்ணா ,லோ.மணிகண்டன், அ.முஹம்மது தாஹிர் மற்றும் கா.சந்தோஷ்)

உங்கள் அன்புக்கடிதம் கிடைக்கபெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து கவனித்து அதைப்பற்றி எழுதி இருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.சந்திரயான்-2 லேண்டர் வெற்றிகரமாக தரையில் இறங்காமல் இருந்தாலும்,சந்திரயான்-2 ஆர்பிட்டர் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சந்திரயான்-2 ஆர்பிட்டர்,அதனுடைய கருவிகள் மூலம் அறிவியல் ரீதியான தகவல்களை,ஒரு வருட திட்ட ஆயுட்காலத்தை தாண்டி ஏழு வருட காலத்திற்கு அனுப்பும்.

நீங்கள் சந்திரயான்-2 பற்றிய கட்டுரை போட்டியில் வென்று ஸ்ரீஹரிகோட்டா view gallaryக்கு இரண்டுமுறை வந்து சென்றதை அறிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களுக்கும்,உங்கள் பள்ளி ஆசிரியர் திரு சரவணன் அவர்களுக்கும் என்
வாழ்த்துக்கள்.உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் அன்பாலும் ஆதரவாலும் நம் இந்திய விண்வெளித்துறை மென்மேலும் வளர்ந்து பல சாதனைகளை படைக்கும்.

நீங்கள் அனைவரும் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென,மற்றும் உங்களின் விண்வெளி பயண லட்சியம் கைகூட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

உங்கள் அன்புடன்
கை. சிவன்


இந்தக் கடிதங்கள் இந்தியாவின் விண்வெளி ஆய்வுகள் மற்றும் எதிர்காலம் குறித்து பெரிதும் நம்பிக்கை ஊட்டுகின்றன!

-சரவணன்

Jan 10, 2020

ஓநாய் சந்திர கிரகணம் :








இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (10/01/20) இரவு நிகழ உள்ளது.இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என்று நாசா பெயரிட்டுள்ளது. கிரகங்கள் சந்திரனை விழுங்குவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்பதையெல்லாம் தாண்டி கோணங்களின் விளையாட்டு எனும் புரிதலுக்கு இன்று நாம் வந்துவிட்டோம்.

சந்திர கிரகணம் நிகழ முக்கியமான சில கட்டுப்பாடுகள் உண்டு :

1)சந்திரன்,பூமி,சூரியன் ஆகிய இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வர வேண்டும்.

2)சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி இருக்க வேண்டும்.

3)பெளர்ணமி நாளாக இருக்க வேண்டும்.

இன்றைய கிரகண கால அளவு:

இன்று இரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை
2.42 மணிமுடிய கிரகணம் நிகழ உள்ளது.

பெயர்க்காரணம்:

சூரியனிடமிருந்து சந்திரனுக்குக் கிடைக்கும் ஒளியை பூமி முழுதாக மறைக்காமல் பூமியின் வெளிப்புற நிழல் மட்டுமே மறைக்கும் என்பதால் இன்றைய கிரகணத்தை பெனும்பரல் சந்திர கிரகணம் (Penumbral lunar eclipse -தெளிவற்ற சந்திர கிரகணம்) என்று அழைக்கின்றனர்.

ஓநாய்கள் ஊளையிடும் போது ஏற்படும் தோற்றம் போன்று சந்திரனின் தோற்றம் அமைவதால் இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் (Wolf lunar eclipse) என்ற பெயரை நாசா சூட்டியுள்ளது.மேலும் Penumbral lunar eclipse அன்று முழு நிலவாக இருக்குமாயின் அதனை Wolf lunar eclipse என்று அழைப்பர்.

எப்படி பார்க்கலாம் :

இன்றைய சந்திர கிரகணத்தைக் காண உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்.பாதிப்பு ஏதும் ஏற்படாது.

எங்கு தெரியும் :

இந்தியாவின் அனைத்து இடங்களிலும் இந்த பெனும்பரல் சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.


அடுத்து எப்போது:

இந்த ஆண்டில் 4 முறை சந்திர கிரகணம் நிகழ உள்ளது.இன்றைய தினத்தைத் தொடர்ந்து ஜீன் 5, ஜீலை 5,நவம்பர் 30 ஆகிய நாட்களில்  சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

முழுமையான சந்திர கிரகணத்தை இன்று பார்க்க முடியாவிட்டாலும்,மேக மூட்டம் இல்லாமல் இருந்தால்,பூமியின் வெளிப்புற நிழல் மட்டுமே சந்திரனை மறைக்கும் பெனும்பரல் சந்திர கிரகணத்தை "நிலாச்சோறுடன்"இன்று பார்த்து இரசிக்கலாம்!

- சரவணன்

Jan 9, 2020

நேற்று! இன்று!! நாளை?

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தானாம்! அவன் தன் குடிமக்களிடம் ஒரு மூட்டை நெல் கொடுத்து ஒரு மூட்டை அரிசி கேட்டு கட்டாயப்படுத்துவானாம்!நெல்லைப் பிரித்து எடுக்கும் போது பாதி மூட்டை உமியாகப் போய் விடுவதால்,மக்கள் கைக்காசு போட்டு பாதி மூட்டை அரிசி வாங்கி,ஒரு மூட்டை அரிசியாக அரசனிடம் கொடுப்பார்களாம்!

அரசவையில் பரிசுகொடுப்பது போலக் கொடுத்து பின்னர் தன் வீரர்களை மாறுவேடத்தில் அனுப்பி அவற்றைக் கவர்ந்து கொள்வானாம்!

அரசு கஜானா செல்வத்தை மக்கள் நலத்திட்டங்கள் எனும் பெயரில் தன் வாரிசுகளின் பெயர்களுக்கு மாற்றிவிடுவானாம்!


வெளிநாடுகளில் இருந்து பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கி,தம் குடிமக்களிடம் அதிக விலைக்கு விற்பானாம்!

இத்தகைய  செயல்பாடுகளால் அவனை மோசமான அரசன் என்று மக்கள் தூற்றினார்களாம்!


ஒரு நாள் மரணப்படுக்கைக்குச் சென்ற அரசன்,அடுத்து அரசனாக இருக்கும் தன் மகனிடம் "தனக்கு மக்களிடம் எப்படியாவது நல்ல பெயர் கிடைக்கச் செய்ய வேண்டும்" என்ற வேண்டுகோளுடன் இறந்து விட்டானாம்!


அடுத்து அரசனான மகன்,மக்களிடம் ஒரு மூட்டை உமி மட்டும் கொடுத்து,ஒரு மூட்டை அரிசி கேட்டானாம்.மக்கள் முழு மூட்டை அரிசியும் காசு போட்டு வாங்கிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்!


இந்த அரசனது வீரர்கள் மக்கள் பணத்தை வரி எனும் பெயரில் நேரடியாகவே கொள்ளை அடித்தார்களாம்!

அரசு கஜானாவில் இருந்த செல்வத்தை எடுத்து நாட்டின் பெரிய பணக்கார்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தானாம்!

உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மிக மிக அதிக விலைக்கு விற்கப்பட்டனவாம்!

இவற்றையெல்லாம் பார்த்த மக்கள் "இவனை விட இவன் தந்தை சிறந்தவன் என்றும்,மகனை விட தந்தை நல்லவன்" என்றும் கூற ஆரம்பித்தார்களாம்!

இவ்வாறு தந்தையின் கடைசி ஆசையை மகன் நிறைவேற்றினானாம்!


முக்கியக்குறிப்பு:

இந்தக் கதையை நேற்றைய மற்றும் இன்றைய ஆட்சிகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் மக்களே🙂

- அகன்சரவணன்

"போர்! போர்! போராட்டம்!"

தற்போது தமிழகத்தில் எங்கெங்கு காணினும்  போராட்டங்களாகவே இருக்கிறது.தினமும் காலையில் போராட்டங்களின் முகத்தில் தான் தமிழகம் கண்விழிக்கிறது.புறமுதுகு காட்டாத புறநானூற்றுப் போராளிகள் வீதிகளெங்கும் திரிகின்றனர்.

இவற்றுள் ஒருசில போராட்டங்கள் சமுதாய மாற்றத்திற்கு மிகவும் அவசியமானவை.அவற்றை மக்களும் தம் கைகளில் எடுக்கின்றனர்.ஆனால் பல போராட்டங்களுக்கான காரணங்கள் போராடுபவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை!சமயத்தில் போராடுபவர்களுக்கே தெரிவதில்லை!

இவ்வாறு அனுதினம் போராட்டங்களுடனே வாழ்வு என்றாகிவிட்ட மக்களுக்கு,போராட்டம் என்பது இப்போதெல்லாம் போரடிக்க ஆரம்பித்துவிட்டது!

போராட்டங்களை சுவாரஸ்யப்படுத்த வேறு யாரெல்லாம்,எதற்கெல்லாம் போராடலாம்?


நடிகர்கள்:

கதையே இல்லை என்று கடுப்படிக்கும் விமர்சனங்கள்,

ரசிகரே இல்லை எனும் ரகளையான டாக்குகள்,

வயதையும்,விக்கையும் குறித்து வருத்தப்பட வைக்கும் வசவுகள் ஆகியவற்றுக்கு எதிராய் பொங்கி எழலாம்!


அதிகாரிகள்:

கமிஷன்,லஞ்சம்,ஊழல் போன்ற சொல்லாடல்கள்,

அறிவு,அனுபவம்,படிப்பு போன்ற கருத்தாடல்கள்,

கட்சி சார்பு போன்ற கஷ்டமான டாஸ்குகள் ஆகியவற்றுக்கு எதிராய் களம் காணலாம்.


இயக்குநர்கள்:

கதை காப்பி காப்பி எனும் கண் கலங்கச் செய்யும் கண்டனங்கள்,

அடுத்த படத்திலாவது இயக்குநர்... என கிழித்து தொங்கவிடும் விமர்சனங்கள்,

எந்தப் படம் எடுத்தாலும் இது என் கதை எனும் அபாய அலறல்கள் ஆகியவற்றுக்கு எதிராய் கரம் உயர்த்தலாம்.


நடிகைகள்:

பொங்கலுக்கு வெள்ளையடித்தது போன்று என்ற தாங்க முடியாத விமர்சனங்கள்,

நடிகை அழகாக மட்டுமே இருக்கிறார் ஆனால் நடிப்பு? என்ற கொடூரமான கூற்றுகள்,

வயதானதால் முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது என்ற வன்மையான உண்மைகள் ஆகியவற்றுக்கு எதிராய் ஆற்றலுடன் போருக்கு போகலாம்.


போலிஸ்காரர்கள்:

குனிந்து கால் கட்டை விரலைத் தொட முடியுமா என்ற அபத்தக் கேள்விகள்,

மாமூல் வாழ்க்கை என்ற மறக்க விரும்பும் மெய்மைகள்,

ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக இருந்த காவல்துறை இப்போது என்று சங்கமிக்கும் சங்கடங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கால்கடுக்க போராடலாம்.


கண்டக்டர்கள்:

சில்லறை இல்லை எனும் சலம்பல்கள்,

படியிலேயே குடியிருக்கும் ரோட்டோர ரோமியோக்கள்,

நிறுத்தத்தில் இறங்காமல் விட்டோரின் சாமியாடல்கள் ஆகியவற்றிற்கு எதிராய் நடைபயணமாய் போராடலாம்.


சாமியார்கள்:

அதிரடி காட்டும் நள்ளிரவு சோதனைகள்,

சிறப்பை சிதறடிக்கும் சி.டிக்கள்,

கைதுக்குக் காரணமாகும் கனவுக் கன்னிகள் ஆகியவற்றுக்கு எதிராய் தியானப் போராட்டம் புரியலாம்.



கிரிக்கெட் வீரர்கள்:

அள்ளித் தெளிக்கும் புள்ளி விபரங்கள்,

என்ன ஆடறான் எனும் ஆயாக்களின் தாளிப்புகள்,

வெற்றியின் விளிம்பில் சடசடக்கும் மழை ஆகியவற்றுக்கு எதிராய் ஓடி ஓடிப் போராடலாம்.


பிச்சைக்காரர்கள்:

குல்லாய் போடும் செல்லாத நோட்டுகள்,

அவ்வப்போது ஆக்கிரமிப்பு என அப்புறப்படுத்தும் அதிகாரிகள்,

உழைப்பு என்ற பிழைப்பைக் கெடுக்கும் சொற்கள் ஆகியவற்றுக்கு எதிராய் அமைதிப் போராட்டம் நடத்தலாம்.



பூசாரிகள் :

நாவன்மையுடைய நாத்திகவாதிகள்,

தட்டுக் காசினை தகர்க்கும் உண்டியல்கள்,

சாமியாடுகையில் சங்கடப்படுத்தும் கேள்விகள் ஆகியவற்றுக்கு எதிராய் தீச்சட்டி எடுக்கலாம்.


கணவர்கள்:

அபாயகரமான அழுகாச்சி சீரியல்கள்,

உயிரே இல்லாத உப்புமாக்கள்,

தலை கிறுகிறுக்க வைக்கும் தள்ளுபடிகள் ஆகியவற்றிற்கு எதிராக தினவுடன் போராடலாம்.


மனைவிகள்:

கணவர்களைக் கிறுக்குப் பிடிக்க வைக்கும் கிரிக்கெட் மேட்ச்கள்,

பேராண்மைக்கு எதிரான பேஷன் ஷோக்கள்,

ஆறே வாரங்களில் சிகப்பழகு என்ற அபத்தங்கள் ஆகியவற்றை எதிர்த்து கோதாவில் குதிக்கலாம்.


கல்லூரி மாணவர்கள்:

இணைய தொடர்பை அந்தரத்தில் தொங்க விடும் ஜாமர்கள்,

செட்டே ஆகாத செமஸ்டர்கள்,

மலைமேல் மலைபோல் வந்து குவியும் அரியர்கள் ஆகியவற்றிற்கு எதிராய் களத்தில் உன்மத்தம் கொள்ளலாம்.

அம்மாக்கள்:

தன் குழந்தையை டோலக்பூரிலிருந்து மீட்கவும்,

குழந்தைகளுக்கு விட்டு விடுதலையான விடுமுறை நாட்களைக் குறைக்கவும்,

தன் அன்பை விட தன் குழந்தை அதிகம் உருகும் ஐஸ்கிரீம்,சாக்லேட் உற்பத்தியைத்
தடுக்கவும் தாய்மார்கள் வீரச்சமர் புரியலாம்.


மாமியார்கள்:

கொடுமைக்கார மாமியார் சீரியல்களைத் தடை செய்யக் கோரியும்,

வரதட்சணை என்ற சொல் வரலாற்றுப் பிழையான இதை எதிர்த்தும்,

தலையணை மந்திரங்கள் தடை செய்யக் கோரியும் உணர்வுடன் போரிடலாம்.


காதலர்கள்:

சுதந்திரம் கெடுக்கும் சுண்டல்காரர்களை எதிர்த்தும்,

கிண்டல் செய்து கீச்சிடும் ஜோக்குகள் நீக்கவும்,

திடுக்கிடச் செய்யும் கூட்டம் நிறைந்த திரையரக்குகள் ஆகியவற்றுக்கு எதிராய் கை கோர்த்துப் போராடலாம்.


சேல்ஸ்மேன்கள் :

அரை நாள் கழித்து எதுவும் பிடிக்கவில்லை எனும் ஏமாற்றங்கள்,

தள்ளுபடியை விட தள்ளச் சொல்லும் தர்ம சங்கடங்கள்,

நின்றே சலிக்கும் நிர்பந்தங்கள் ஆகியவற்றிற்கு எதிராய் பொறுமையாய் போராடலாம்.


குழந்தைகள்:

டிவி,செல்போனில் போடப்படும் பேரண்டியல் லாக்குகள்,

மாலை நேர மகிழ்ச்சியைக் கொல்லும் டியூசன் கள்,

எதற்கிந்த கொடுமை எனும் மாறுவேடப் போட்டிகள் ஆகியவற்றுக்கு எதிராக மார்தட்டிப் போராடலாம்.

அரசியல்வாதிகள்:

குதிரை பேரம் நடக்கையில் குளிர் காயும் மீடியாக்கள்,

எப்போதாவது தொகுதிப் பக்கம் சென்றால் ஏற்படும் மக்களின் முற்றுகைகள்,

வளர்ச்சி நிதிகளில் கிளர்ச்சி செய்யும் ஆய்வுக் குழுக்களுக்கு எதிராய் வேட்டியை மடித்துக் கட்டலாம்.


தமிழக மக்கள்:

பேராட்டங்களால் பொறுமை இழந்து போன தமிழக மக்கள்,போராட்டங்கள் போதுமடாசாமி,இனி போராட்டங்களே வேண்டாம் என ஒன்றிணைந்து போராடலாம்!

-அகன்சரவணன்

நேர்மை - சொல் அல்ல செயல்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான இரண்டு வாய்ப்புகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன!ஒன்று,நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது!அல்லது அவற்றைச் சரியானபடி மற்றும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்வது!சமுதாயத் தீமைகளைக் கண்டு வெறுமனே குறைகூறிப் புலம்புவதை விட,அதனைச் சற்றேனும் மாற்றியமைக்க முயலுதல் சிறந்தது என்பர்.ஏனெனில் தனி மனிதனைத் தவிர்த்தால் சமுதாயம் என்று தனியாக ஒன்றுமில்லை!

அதிலும் சமுதாயத்தில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஒரு ஆசிரியருக்குப் பெரும் பங்குண்டு.

எமது ஆசிரியப் பணியில் யாம் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது,"குறிப்பேடு ஏன் வாங்கவில்லை?"என்ற எமது வினாவிற்கு"பெற்றோரின் ஓட்டுக்கான பணம் கிடைத்தவுடன் குறிப்பேடு வாங்கி விடுகிறேன்" என்ற மாணவனின் பதில்.


இந்த பதில் எமக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.நிதர்சனம் அப்பட்டமாய் கண்முன் நின்றது.

சனநாயகத்தின் தோல்வியும்,இன்றைய மக்களின் செயல்பாடுகளால் அது கேலிக்கூத்தாக மாறி இருப்பதும் முகத்தில் அறைந்தது.

எவ்விதக் குற்றவுணர்வும் இன்றி மாணவனால் கூறப்பட்ட பதில்,பிஞ்சு மனங்களில் விதைக்கப்பட்ட நஞ்சை வெளிப்படுத்துவதாய் இருந்தது.

இரு இரவுகள் உறக்கமின்றிக் கழிந்தன.வாக்கிற்கு பணம் பெறுதல் தவறு என்று உணராத இளைய தலைமுறையைக் கண்டு ஒரு ஆசிரியராகப் பெரும் குற்ற உணர்வு ஏற்பட்டது.


கேள்விகளில் இருந்து மட்டுமல்ல,சில நேரங்களில் பதில்களில் இருந்தும் கூட மாற்றங்கள் பிறக்குமல்லவா?


மாபெரும் விருட்சத்தின் விதை சிறியது அன்றோ?எமது மாணவர்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தோம்!

மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல!மாபெருஞ்செயல்!

வெறுமனே சொற்களால் அறிவுரை கூறுவது எல்லா நேரங்களிலும் பயனுடையதாய் இராது.

செயல்பாடுகள் வழியே கற்றுக் கொள்ளுதலே  சிலையில் எழுத்தாம்.எம் மாணவரைச் செயல்படவைக்க முடிவு செய்தோம்.

வாக்கு விற்பனையின் தீமைகள் குறித்து படக்காட்சிகள்,
உரைகள் உள்ளிட்டவை மூலம் மாணவர்களுக்கு தெளிவை அளித்த பின்,ஒரு குறிப்பிட்ட நாளில் மாணவர்களைத் தனித்தனியாக "வாழ்த்து அட்டைகளைத்" தயாரிக்கச் செய்தோம்.

அவற்றில் தேர்தல் நாள் குறிப்பிடப்பட்டு,வாக்களிப்பதன் அவசியம் குறித்த படங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் மாணவர்களால் எழுதப்பட்டன.

உச்சமாக "வாக்கு விற்பனைக்கு அல்ல" எனும் வாசகம் வாழ்த்து அட்டைகளில்  பெரிதுபடுத்தப்பட்டு மாணவர்களால் எழுதப்பட்டது.


அவற்றை பெற்றோரிடம் அளித்து "வாக்களிக்கப் பணம் பெறமாட்டோம்" எனும் உறுதி மொழியைப் பெறச் செய்தோம்!

வாழ்த்து அட்டைகளை அளித்தவுடன் பெற்றோரின் பதில்கள் மற்றும் செயல்பாடுகளை அடுத்த நாள் மாணவர்கள் வகுப்பில் பகிர்ந்து கொண்டனர்.

"கொடுப்பதினால் பெறுகிறோம்" என்பதில் தொடங்கி "இல்லாததால் பெறுகிறோம்"வரை கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

விமர்சனங்களைத் தாண்டி,இந்த விஷயத்தில் தாங்கள் செய்வது தவறு எனும் உணர்வு முதன் முறையாக மாணவர்களால் பெற்றோருக்கு ஊட்டப்பட்டது.
தொலைபேசியிலும்,நேரிலும் இது குறித்து சில பெற்றோருடன் உரையாடிய போது,கண்கள் கலங்கிய வண்ணம் நெகிழ்வுடன் தம் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்!


பிறர் அறிவுரையைக் கேட்டுப் பொங்கும் பெற்றோர் கூட, குழந்தைகளின் அன்புரையில் இருந்த நியாயத்தை உணர்ந்தனர்.தம் குழந்தைகள் குறித்த பெருமித உணர்வு கொண்டனர்!


அதன் பயனாய் வாக்கிற்குப் பணம் அளிக்க வீடுகளுக்கு வந்தோரைப் பெற்றோரும்,பெற்றோர் அனுமதியுடன் மாணவர்களும் திருப்பி அனுப்பும் நிகழ்வுகள் தொடங்கின.வெற்றிகரமாகத் தொடர்ந்தன.பெற்றோர் அனைவரும் வாக்களித்தனர்.பணம் பெறாமல்!திருப்பூர் மாநகரின் மாற்றம் தரும் ஒரு நிகழ்வாய் மாணவர்களின் இச்செயல்திட்டம் மாறியது.


அன்பு,கருணை,இரக்கம் ஆகிய அனைத்து நற்குணங்களின் ஆணிவேராய் இருப்பது நேர்மை.ஆனால் நேர்மை குணம் உடையோரை இந்தச் சமூகம் சற்று ஆச்சரியத்துடனே உற்று நோக்குவது விந்தையானது!

எதிர்கால இளைய தலைமுறை நேர்மையான மனிதர்களைக் கொண்டிருப்பின் இந்தப் பூமியே சொர்க்கப் பூங்காவாக மாறிவிடும்.

இன்றைய இளைய தலைமுறைக்குக் கற்பிக்க ஒரு ஆசிரியருக்கு மேம்பட்ட திறன்கள் தேவை.ஒரு ஆசிரியர் தனக்குத் தானே நேர்மையை வளர்த்துக் கொள்வதும்,அது மாணவரிடம் வளரத் தேவையான செயல்பாடுகளைத் திட்டமிட்டு வடிவமைத்தலும் இன்றைய சூழலில் பெருங்கடமையாகிறது.

"நம்பிக்கையுடன் தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருப்போம்!
முளைத்தால் மரம்! இல்லையேல் உரம்!" 
எனும் தோழர் சேகுவேராவின் வரிகளை ஒற்றி இனி தேர்தல்கள் வரும்போதெல்லாம் இது போன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டு நடத்த தீர்மானித்துள்ளோம்.

கோடானு கோடி நீர்த்துளிகள் சேர்ந்ததே பெருங்கடல்.துளியான இந்நிகழ்வும் ஆழியாய் மாறுமென்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்!


எமது வகுப்பறை சார்ந்த பிந்தைய நிகழ்வுகளுக்கு இந்நிகழ்வு ஒரு துண்டுகோலாய் அமைந்தது.

நூறு சதவீதம் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எமது எண்ணத்தை மேலும் வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதாய்,
நேர்மை என்பது வெறும் சொல் அல்ல,பெருஞ் செயல்! என்பதை உணர்த்துவதாய் மாணவனின் பதிலும்,அதனை ஒட்டி நிகழ்த்தப்பட்ட செயலும் அமைந்தன என்றால் அது மிகையில்லை!

- அகன்சரவணன்

ஸ்பேர் வீல் ஸ்டெப்னி ஆன கதை

சாதாரணமாக ஸ்டெப்னி என்று அழைக்கப்படும் ஸ்பேர் வீல்கள் வாகனங்கள் உருவான போது தயாரிக்கப்படவில்லை.அக்காலத்தில் குதிரை வண்டிகள் ஏராளமாகப் புழக்கத்தில் இருந்தன.அவை செல்லக் கூடிய தரத்திலேயே சாலைகளும் இருந்தன.மேலும் ஓடும்போது  குதிரைகளின் நகங்களும் சாலைகளில் ஆங்காங்கே விழுந்தன.

குதிரைகளின் நகங்கள் குத்தி வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகின.வாகனங்கள் வந்த புதிதில் இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.மேற்கத்திய அரசுகள் இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன.குதிரைகள் மற்றும் குதிரை வண்டிகள் வைத்துக்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.அரச குடும்பங்கள் செல்லும் பாதைகளின் ஓரம் வரிசையாக அடிமைகள் நிறுத்தப்பட்டு சாலைகளைப் பெருக்கச் செய்து கார்களின் சக்கரங்கள் பஞ்சர் ஆவதைத் தடுக்க முயற்சிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன!

ஆயினும் இது உடனே சரிசெய்ய முடியாத பிரச்சனையாகவே இருந்து வந்தது.வால்டர் மற்றும் டாம் டேவிஸ் சகோதரர்கள் இந்தப் பிரச்சனைக்கு புதிய முறையில் தீர்வு கண்டனர்.ஆம்.அவர்கள் வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆனால் மாற்றுவதற்கு என்று ஸ்பேர் வீல்களைத் தயாரித்து விற்க ஆரம்பித்தனர்.


இங்கிலாந்தின் இலண்டன் நகரில் இருந்த  ஸ்டெப்னி எனும் தெருவில் வால்டர் டேவிஸ் மற்றும் டாம் ஆகியோர் ஸ்பேர் வீலை முதன்முதலில் தயார் செய்து விற்றதால் தெருவின் பெயரான ஸ்டெப்னி என்பதே ஸ்பேர் வீலுக்கு வைக்கப்பட்டது!அவர்களது நிறுவனத்தின் பெயர் ஸ்டெப்னி அயன் மாங்கர்ஸ்!

ஸ்டெப்னி நிறுவனம் வேகமாக வளர ஆரம்பித்தது.
ஸ்டெப்னி வீல் வாகன உரிமையாளர்களிடம் பிரபலம் அடைந்தது.அதனால் வாகன உற்பத்தி நிறுவனங்களே வாகனங்களில் ஸ்பேர் வீலை பொருத்தி வழங்க ஆரம்பித்தன. அதற்கான பெயர் ஸ்டெப்னி என்பதாகவே மாறியது.

இரப்பர் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களில்  ஸ்டெப்னி பொருத்துவதற்கு இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தடை விதிக்கப்பட்ட வரலாறும் உண்டு! 
 

இந்தியா இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால்,ஸ்டெப்னி தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் எளிதாக நுழைந்தது.
இந்தியாவிலும் ஸ்பேர் வீல் ஸ்டெப்னி ஆனது.


வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்பது போல மேற்கத்திய நாடுகளில் மோட்டார் வாகனங்களில் ஸ்டெப்னி வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே தமிழர்கள் தேர்ச்சக்கரங்களுக்கு ஸ்டெப்னி வைத்திருந்ததை புறநானூற்றுப் பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது!


ஸ்டெப்னி குறித்த புறநானூற்றுப் (102) பார்வை:

"கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன"

-ஒளவையார்

சக்கரம் பழுதடையும் பொழுது பயன்படுத்துவதற்காகக் கூடுதலாக வண்டியில்  சேமத்திற்காக - பாதுகாப்பிற்காக- இணைக்கப்படுவதே சேம அச்சு.இத்தகைய சேம அச்சு போன்று மக்களுக்கு இடர் வரும் பொழுது அதனைக் களையும் சேம அச்சாக மன்னன் விளங்குகின்றான் என்கிறது ஸ்டெப்னி குறித்து சங்ககால புறநானூற்றுப் பாடல்!

- அகன்சரவணன்

மீம் கிரியேட்டர் :

சென்னையின் ஐந்து நட்சத்திர விடுதியின் அரங்கத்தில் அவர்கள் குழுமியிருந்தனர்.ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத புதிய நபர்கள்.சுமார் நூறு பேர் இருப்பார்கள். எதற்காக அங்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறோம் என்று இதுவரை அவர்களுக்குத் தெரியவில்லை.அவர்களின் மெயில் ஐடி மூலமாக தொடர்பு கொள்ளப்பட்டு,பொன்னான வாய்ப்பு என இங்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.சென்னை வருவதற்கான பயணக்கட்டணம்,தங்கும் இடம்,உணவு ஆகிய அனைத்துமே அவர்களுக்கு இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.ஆனால் எதற்காக இதெல்லாம்?இந்த கூட்டம் யாருக்காக? எதற்காக? என்று அவர்கள் யாருக்குமே புரியவில்லை.காத்திருந்தனர்.

அப்போது அரங்கின் கதவு திறக்கப்பட்டது. நாகரீகமாக உடை அணிந்த சிலர் மேடையில் வந்து அமர்ந்தனர்.அவர்களில் தலைவர் போல் இருந்த ஒருவர் மைக் முன்பு வந்து நின்றார்.அவர் என்ன கூற போகிறார் என கூட்டத்தில் இருந்த அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவர் பேச ஆரம்பித்தார். "நண்பர்களே நாம் அனைவரும் ஒரு புதிய செயல் திட்டத்திற்காக இங்கு கூடியுள்ளோம். அது என்ன என்பதை தெரிவிக்காமலேயே உங்களை இங்கு வரவழைத்துள்ளோம்.அதற்கு முதலில் வருத்தத்தைத்தெரிவித்துக் கொள்கிறேன்.நாங்கள் தமிழகத்தின் மிகப் பிரபலமான ஒரு அரசியல் கட்சியின் தொழில்நுட்பக் குழுவினர்.எதிர்வரும் தேர்தலில் எங்கள் கட்சியை எப்படி வெற்றிபெறச் செய்வது என்பதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுப்பது எங்களுடைய முதன்மையான பணி.அதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் ஆக இருக்கலாம்.ஆனால் உங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது.அது என்னவென்றால் நீங்கள் அனைவருமே தமிழகத்தின் மிகச்சிறந்த மீம் கிரியேட்டர்கள்!சரியா?" 

அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.இப்போதுதான் தாங்கள் எதற்காக இங்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஒரு மேம்போக்கான ஐடியா அவர்களுக்குக் கிடைக்க ஆரம்பித்தது!

அவர் தொடர்ந்தார்"நண்பர்களே நீங்கள் சமூகவலைதளங்களில் நிறைய மீம்களை போடுகிறீர்கள்.அதனால் உங்களுக்கு கிடைப்பது வெறும் லைக்குகளும்,பாராட்டுகளும் மட்டுமே.உங்களைப் போன்ற மீம் கிரியேட்டர்களுக்கே உங்களை அடையாளம் தெரியவில்லை.

இந்த கிரியேட்டிவிட்டி திறமையை வைத்து நீங்கள் ஏன் பணம் சம்பாதிக்க கூடாது?நீங்கள் அனைவருமே படித்த இளைஞர்கள்.போதுமான வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் பலர் இருக்கலாம்.சரியான வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களும் இருக்கலாம்.ஆனால் பணத்தின் தேவை என்பது அனைவருக்குமே பொதுவானது தான்.நாங்கள் உங்களுக்கு தரக்கூடிய செயல் திட்டம் மிகவும் சுலபமானது.நீங்கள் இப்போது செய்து கொண்டிருக்க கூடிய அதே பணியை தொடர்ந்து செய்யப்போகிறீர்கள்.அதன் மூலம் பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள்!

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.எங்கள் கட்சி குறித்த பாசிட்டிவான மீம்களை உருவாக்குங்கள்.
அவ்வாறு உருவாக்கக்கூடிய மீம்களை நாங்கள் தரக்கூடிய மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள்.எங்கள் தொழில்நுட்பக் குழு அதை ஆய்வு செய்து அது சரியானதாக இருந்தால் உங்களுக்கு அனுமதி அளிக்கும். அந்த மீம்களை உங்களுடைய சமூக வலைதளங்கள் மூலமாக நீங்கள் பரப்புங்கள்.அதற்குரிய பணம் உங்களுக்கு வழங்கப்படும்.மிகச் சுலபமான பணி.எங்கள் கட்சியின் கொள்கைகளை மிக சுலபமாக மக்களிடத்தில் எடுத்துச் செல்ல இந்த வியூகத்தை நாங்கள் வகுத்துள்ளோம்.இதில் உங்களுக்கு எந்த இடர்பாடும் இருக்க வாய்ப்பில்லை.மிகவும் சுலபம்.தினசரி சில மீம்களை கிரியேட் செய்கிறீர்கள்.அதை நாங்கள் தரக்கூடிய மெயில் ஐடிக்கு அனுப்புகிறீர்கள்.அதில் எங்கள் குழு ஒப்புதல் அளிக்கக் கூடிய மீம்களை நீங்கள் உங்கள் சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுகிறீர்கள்.அதற்கான தொகை உங்களுக்கு வழங்கப்படும் அவ்வளவே!


இதில் யாருக்காவது உடன்பாடு இல்லை என்றால் நீங்கள் இப்போதே இதிலிருந்து விலகிக் கொள்ளலாம்.இதில் கட்டாயம் எதுவுமில்லை.ஆனால் இது ஒரு பொன்னான வாய்ப்பு.உங்களைப் பற்றி யாருக்கும் தெரியப்போவதில்லை.நீங்கள் வழக்கமாக உங்கள் பணிகளையே பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்.உங்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கப் போகிறது. மிகவும் சுலபமான வேலைதான்."

அவர் பேசி விட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.அங்கிருந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். என்ன பதில் கூறுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.இதனை நாட்களாக தன்னுடைய சுய விருப்பத்தின் அடிப்படையில், தன்னுடைய எண்ணங்களை கேள்விகளை, கிண்டல்களாகப் பரப்பிவந்த அவர்களுக்கு, ஒரு அரசியல் கட்சி இது போன்ற ஒரு கூட்டத்தைக் கூட்டி தங்களுக்கு இந்த மாதிரி ஒரு செயல்திட்டத்தை அளிக்கும் என்றும், அதற்காகப் பணமும் அளிக்கும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.யாருக்குமே இதில் மறுப்பு தோன்றவில்லை.அனைவரும்  ஏற்றுக்கொண்டார்கள்!

அவர்களுடைய வங்கி கணக்கு எண்கள் பெறப்பட்டன.அவர்களுக்கான மெயில் ஐடிகள் கொடுக்கப்பட்டன.கட்சியின் கொள்கை விளக்கங்கள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன.அவர்கள் அனைவரும் ஆடம்பரமான மதிய உணவை அருந்திவிட்டு மகிழ்வுடன் கலைந்து சென்றனர்.


அந்தக் கட்சியின் தொழில்நுட்பக் குழுவில் இருந்த ஒரு இளைஞனுக்கு இதில் உடன்பாடு இல்லை.இம்முறை வெற்றியடையும் என அவனுக்குத் தோன்றவில்லை.
இச்செயல் திட்டம் ஏன் வெற்றி பெறாது என்பதற்கு பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டு அவன் விளக்கினான்.ஆயினும் அவனது கருத்து அங்கு மதிக்கப்படவில்லை!

பிரபல கட்சியின் இந்த செயல்திட்டம் அவர்களின் பிரதான எதிர்க்கட்சிக்கும் கசிந்தது!அவர்களும் இதே முறையைப் பின்பற்ற ஆரம்பித்தனர்!

மீம் கிரியேட்டர்களின் பணி தொடர ஆரம்பித்தது.
ஒவ்வொரு நாளும் தங்கள் கற்பனைக்கு எட்டிய,குறிப்பிட்ட அரசியல் கட்சி குறித்த பாசிட்டிவ் மீம்களை உருவாக்கினர்.அவற்றை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மெயில் ஐடிக்கு பகிர்ந்தனர்.அவற்றில் சிலவற்றிற்கு ஒப்புதல் கிடைத்தது.அவற்றை தங்களுடைய சமூக வலைதளங்களில் பரப்பினர்.இரு கட்சிகளுமே போட்டி போட்டுக் கொண்டு சமூக வலைதளங்களில் முட்டி மோதின!

தேர்தல் முடிந்து முடிவுகள் வந்தன.யாருமே எதிர்பாராத வகையில் இரண்டு கட்சிகளுமே படுதோல்வியைச் சந்தித்திருந்தன.புதியதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது!

இரு கட்சிகளின் தொழில்நுட்ப அணியினருக்கும் இதனை ஏற்கவே முடியவில்லை.இது எப்படி என மூளையைக் குழப்பிக் கொண்டனர்.

இந்த செயல்திட்டம் பலன் அளிக்காது எனக் கூறிய அந்த இளைஞனுக்கும் இதில் குழப்பம் தான்.அவன் எதிர்பார்த்தபடி இச்செயல் திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது.ஆனால் இரு கட்சிகளும் எப்படி தோற்றன என அவனுக்குப் புரியவில்லை.


தனது லேப்டாப்பை எடுத்து வைத்து மீம்களை ஆய்வு செய்யத் தொடங்கினான்.நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின் அவன் அந்த நுட்பத்தைக் கண்டறிந்தான்.

இரு கட்சிக்குமே ஒவ்வொரு பாசிட்டிவ் மீமுக்கும் அடுத்த நொடியே ஏராளமான நெகட்டிவ் மீம்கள் போடப்பட்டு இருந்தன.மீமின் கான்செப்ட் புரிந்து அடுத்த நொடியே பதில் போட யாராலும் முடியாது.பாசிட்டிவ் மீமும் நெகட்டிவ் மீமும் ஒரே நபர் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியம்.ஆமாம்!ஒவ்வொரு மீம் கிரியேட்டரும் அவரின் மீம்களுக்கு அவரே பேக் (போலி)ஐடி மூலம் எதிர் மீம்கள் போட்டுள்ளார்!


என்றுமே கிரியேட்டர்கள் சுயமாகத்தான் சிந்திப்பார்கள்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும்,கட்சித் தொண்டர்கள் போல தலைமை கூறுவதை எல்லாம் அவர்கள் கேட்க மாட்டார்கள்.அவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தவே முடியாது.எனவே இந்த செயல் திட்டம் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பதைத் தான் எடுத்துக் கூறியும் ஏற்காத தன் அணி சீனியர்களுக்கு தோல்விக்கான காரணத்தை விளக்க வேகமாகச் செல்ல ஆரம்பித்தான் முன்னாள் மீம் கிரியேட்டரான அந்த இளைஞன்!

- அகன்சரவணன்

வாசிப்போம்! உலகை நேசிப்போம்!

அறிவு வளர்ந்து முதிர முதிர வாய் தன் வேலையைக் குறைத்துக் கொள்ளுமாம்.அந்த வகையில் அறிவை முதிரச் செய்வன புத்தகங்கள்.

லாரிபேஜ் மற்றும் செர்கிபிரின் இருவரும் இணைந்து கூகுள் நிறுவனத்தை உருவாக்கினர்.அமெரிக்க பணக்காரர்கள் வரிசையில் தற்போது இவர்கள் 9 மற்றும் 10 ஆம் இடத்தில் இருக்கிறார்கள்.இவர்கள் இருவரும் தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் (CEO) இருந்து விலகி,அனைத்துப் பொறுப்புகளையும் சுந்தர் பிச்சையிடம் கொடுத்துள்ளனர்.

சரி இனி இவர்கள் என்ன செய்யப்போகின்றனர் என்றால்,புதிய கண்டுபிடிப்பில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டி தீவிரமாக புத்தகம் வாசிக்கப் போகின்றனராம்! 

தீவிரமான புத்தக வாசிப்பின் மூலம் புதிய சிந்தனைகளையும்,அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளையும் முன்னெடுக்க உள்ளதாக மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளனர்.

கூகுள் நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்பும் இருவரும் தீவிர புத்தக வாசிப்பாளர்களே.புத்தக வாசிப்பின் மூலமே புதிய சிந்தனையைப் பெற முடியும் என்று இவர்கள்  நம்பினர்.அது கூகுளின் வளர்ச்சி மூலம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் இணையத்தையே,
குறிப்பாக கூகுளையே நம்புவோர்க்கு,புத்தக வாசிப்புதான் புதிய சிந்தனையைத் தரும் என்பதை கூகுள் நிறுவனர்கள் தங்களின் வெற்றி மூலமே நிரூபித்துள்ளனர்.அடுத்து இவர்கள் என்ன கண்டுபிடிக்கப் போகிறார்கள் என உலகமே இன்று இந்த புத்தகக் காதலர்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது.

இணைய அறிவே வேண்டாமா? என்றால் அவசியம் வேண்டும்!உணவாக அல்ல!ஊறுகாயாக!

இணையம் மூலம் நாம் அறிவது தகவல்கள் மட்டுமே.சுய சிந்தனையே கண்டுபிடிப்புகளின் தாயாகும்.அதற்கு அடித்தளமிடுபவை புத்தகங்களே.

நீங்கள் சிலநாட்களுக்கு முன் இணையம் மூலம் தேடிப் பெற்ற தகவல் தற்போது உங்களுக்கு நினைவில் இருக்காது.ஆனால் எப்போதோ சிறு வயதில் படித்தவை உங்கள் நினைவில் இருக்கும்.ஏனெனில் இணையம் தகவல்.புத்தகம் அறிவு.

அன்பு நண்பர்களே,நேரமில்லை என்று சாக்கு கூறுவதை உதறிவிட்டு புத்தகவாசிப்பின் பக்கம் உங்களின் கவனத்தைத் திருப்புங்கள்.
குழந்தைகளையும் வாசிக்க ஊக்குவியுங்கள். புத்தகங்களைக் குழந்தைகளுக்கு பரிசாகக் கொடுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு உங்களின் மிகச்சிறந்த வழிகாட்டலாக இது அமையும்.2020 ஆம் ஆண்டிற்கான உங்களின் சபதமாக இது அமையட்டும்.

அடுத்தவர் அறிவைக் கடன் வாங்கிக் கொண்டு இருக்காமல் சுயமாகச் சிந்திப்போம்.புதிய புதிய கண்டுபிடிப்புகளை நமது குழந்தைகள் உருவாக்கத் தூண்டுவோம்.

வாசிப்போம் உலகை நேசிப்போம்!

அகன்சரவணன்
9659746646