Jul 23, 2019

அண்ணா நூற்றாண்டு நூலகம் - ஒரு பருந்துப் பார்வை







அண்ணா நூற்றாண்டு நூலகம் :


தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல,படிக்கப் படிக்க அறிவு வளரும் எனும் குறளின் வாக்கிற்கு இணங்க,சென்னையில் 8  மாடிகளில் செம்மாந்து நிற்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம்.


மாணவர்களின் இஸ்ரோ பயணத்தை முடித்த பிறகு,இடையில் கிடைத்த அரை நாளினை எப்படி செலவிடுவது எனும் எண்ணம் தோன்றியவுடனே நினைவிற்கு வந்தது அண்ணா நூற்றாண்டு நூலகமே.


சென்னையில் பார்க்க வேண்டிய,படிக்க வேண்டிய மட்டுமல்லாது நேரத்தைப் பயனுடன்  செலவிட வேண்டிய,தவறவிடக் கூடாத இடம் அண்ணா நூற்றாண்டு நூலகம்.



ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையானது அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும்.3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது.தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம்,மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது.இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக யுனஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.



தளங்கள் :


சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு:


பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக்கணினிகளைக் கொண்டு வந்து படிப்பதற்கான தனி பிரிவு உள்ளது.உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களைக் குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம்.

போட்டித் தேர்வுகளுக்குப் படிப்போருக்கான கூடமும்,போதுமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.




மெய்ப்புல அறைகூவலர் பிரிவு :


மெய்ப்புல அறைகூவலர் பிரிவில் பார்வையற்றோர்களுக்காகச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இப்பிரிவில் மெய்ப்புல அறைகூவலர்கள் தங்களின் கல்வி தாகத்தைப் போக்கிக்கொள்ளலாம்.இப்பிரிவில் 500 க்கும் மேற்பட்ட பிரைய்லி புத்தகங்களும், 400 க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளும் உள்ளன.



நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு :



நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவில் தமிழ்,ஆங்கிலம்,இந்தி,மலையாளம் மற்றும் தெலுங்கில் பல நாளிதழ்களும்,பருவ இதழ்களும் உள்ளன.தமிழில் வெளியிடப்படும் அனைத்து பருவ இதழ்களும் இங்கு உள்ளன என்பது தனிச்சிறப்பு.
கல்வி,கலை,இலக்கியம்,பண்பாடு,அறிவியல்,தொழில்நுட்பம்,விளையாட்டு,சமயம், மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு சம்மந்தமான பருவ இதழ்களும் உள்ளன.உள்நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்து பருவ இதழ்கள் பெறப்பட்டு மக்களின்  பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன.இங்கு பருவ இதழ்கள்,வார இதழ்கள்,மாத இதழ்கள் என்று பகுக்கப்பட்டு எளிய முறையில் அலமாரியில் வைக்கப்பட்டுள்ளன.கூடுதலாக பழைய நாளிதழ்களும்,பருவ இதழ்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.




குழந்தைகள் பிரிவு :


முதல் தளத்தில் 15000 சதுர அடிப் பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற்பிரிவு அமைந்துள்ளது.இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.இப்பிரிவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பொதுமக்களும் பார்வையாளர்களாக வந்து செல்லலாம்.குழந்தைகள் பிரிவின் நுழைவாயிலின் எதிர்புறம் இயற்கை எழில் கொஞ்சும் செயற்கை மரமும்,அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் மற்றும் குரங்குகளும் காண்போரை மகிழ வைக்கின்றன.குழந்தைகள் கலை  நிகழ்ச்சிக்கென்று சிறு மேடையும் அமைக்கப் பட்டுள்ளது.இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுபவையாகவும் உள்ளன.இங்கு வைக்கப்பட்டுள்ள கணினிகளின் வழியாக குழந்தைகள் நீதிக் கதைகள் கேட்கவும்,விரும்பும் விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.




தமிழ் நூல்கள் பிரிவு :



இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.'அ' பிரிவில்,அண்ணா எழுதிய மற்றும் அண்ணாவைப் பற்றிய நூல்கள்,
பொது நூல்கள்,பொது அறிவு நூல்கள்,கணினி அறிவியல்,கலைக் களஞ்சியம்,தொகுப்பு நூல்கள்,
இதழியல்,தத்துவம் மற்றும் உளவியல்,சுய முன்னேற்ற நூல்கள்,சமய நூல்கள்,ஆன்மீகம்,
அரசியல்,பொருளியல்,சட்டம்,வணிகவியல்,
மொழியியல்,நாட்டுப்புறவியல்,தமிழ் அகராதி,இலக்கண நூல்கள்,அறிவியல்,வானியல்
கணிதவியல்,தொழில் நுட்பவியல்,மருத்துவம், பொறியியல்,வேளாண்மை, நுண்கலைகள்,
திரைப்படவியல்,விளையாட்டு பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன.



'ஆ' பிரிவில்,சங்க இலக்கிய நூல்கள்,
சிற்றிலக்கியங்கள்,கவிதைகள்,கதைகள், கட்டுரைகள்,சிறு கதைகள், புதினம்,நாடகம்,பயணக் கட்டுரைகள்,கடிதங்கள்,நகைச்சுவை நூல்கள்,வாழ்க்கை வரலாறு,இலங்கைத் தமிழர் வரலாறு,புவியியல் மற்றும் அரிய நூல்கள் போன்றவை மிகச்சிறந்த முறையில் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.




ஆங்கில நூல்கள் பிரிவு :



மூன்றாவ‌து முத‌ல் ஏழாம் த‌ள‌ம் வரை ஆங்கில‌ நூல்க‌ள் பாட‌ வாரியாக‌ ப‌குத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.


மூன்றாவது தளத்தில் ஆங்கில மொழியிலான பல புத்தகங்கள் உள்ளன.பொது அறிவு,கணினி அறிவியல்,நூலகம் & தகவல் அறிவியல்,
தத்துவம்,உளவியல்,அற இயல் மற்றும் மதம், சமூகவியல்,புள்ளியியல்,மற்றும் அரசியல் தொடர்பான நூல்கள் உள்ளன.



நான்காவது தளத்தில் பொருளியல்,சட்டம்,பொது நிர்வாகம்,கல்வி,வணிகவியல்,மொழியியல்,
மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளன.



ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல்,
கணிதவியல்,வானவியல்,இயற்பியல்,
வேதியியல்,புவியமைப்பியல்,உயிரியல்,மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்கள் உள்ளன.



ஆறாவது தளத்தில் பொறியியல்,வேளாண்மை, உணவியல்,மேலாண்மை, கட்டிடக்கலை,
நுண்கலை,மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்கள் உள்ளன.


ஏழாவது தளத்தில் வரலாறு, புவியியல்,
வேதியியல்,சுற்றுலா & பயண மேலாண்மை மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன.



எட்டாவது தளத்தில் பள்ளிக் கல்வித்துறையின் "கல்வி தொலைக்காட்சி "யின் அலுவலகம் இயங்குகிறது.



குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.நூலகம் முழுவதும் குளிரூட்டப்பட்டு ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமையிடம் போன்று காணப்படுகிறது.




முதலில் இவ்வளவு பெரிய கட்டடத்தில் நூலகம் என்பது மாணவர்கள் நம்பமுடியாத ஒன்றாய் இருந்தது!



ஒவ்வொரு தளமாக அழைத்துச் சென்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்ததும் மாணவரது ஆர்வம் பன்மடங்கு அதிகரித்ததைக் கண்கூடாய்க் காண முடிந்தது.



குறிப்பாகக் குழந்தைகள் பிரிவு மாணவர்களைக் கவர்ந்திழுத்தது.புத்தகங்களைத் தேடிப்படிக்க ஆரம்பித்தனர்.மாணவர்களின் அறிவுத்தேடல் ஆசிரியர்களுக்கு என்றுமே மகிழ்வைத் தரக்கூடிய ஒன்றேயாகும்.



அரைநாள் பொழுது அற்புதமாய்க் கழிந்தது!


சென்னையில் தவறவே விடக் கூடாத இடம் "அண்ணா நூற்றாண்டு நூலகம்.ஒவ்வொரு மாவட்டத்திலும் இதைப் போன்ற நூலகம் அமைப்பது எதிர்காலத் தலைமுறைக்கு ஏற்றமளிப்பதாய் அமையும்.


புகைப்படங்கள் :







Add caption












No comments:

Post a Comment