Mar 25, 2020

தேவை ஒரு பழக்கம்







இன்று மக்கள் வெளியே வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தாலும்,குடும்பத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள குடும்பத்தில் ஒருவராவது வெளியே வருவது அவசியமாகிறது.
அவ்வாறு வெளியே வரும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக கடைபிடிக்க வேண்டும்.

இவை நம்மையும் நம் குடும்பத்தையும் நோய் தொற்றிலிருந்து முற்றிலும் விலக்கி வைக்க கூடும்.



ஒரு நபர்:


அடிப்படைத் தேவைக்கான பொருள்களை வாங்குவதற்கு குடும்பத்திலுள்ள வயது வந்த நபர்களில் யாராவது ஒருவர் மட்டுமே தொடர்ந்து வெளியே செல்ல வேண்டும்.
ஆள் மாற்றி மாற்றி வெளியே செல்வதை தவிர்த்துவிடல் வேண்டும்.


ஒரு முறை:


தேவையான பொருள்களை முறையாக திட்டமிட்டு பட்டியலிட்டுக் கொண்டு,ஒரே முறையில் அவற்றை வாங்கி வந்து விட வேண்டும்.ஒரே நாளில் பல முறைகள் என்பதை தவிர்த்து விடல் வேண்டும்.


ஒரு ஆடை:


வெளியே செல்லும்போது ஒரே ஆடையை தொடர்ந்து அணியலாம்.கைகள் மற்றும் கால்களை முழுக்க மூடும்படியான ஆடைகள் சிறந்தது.வெளியே போய்விட்டு வந்த பிறகு  அந்த ஆடையை துவைத்து வெயிலில் உலர்த்தி தனியாக வைத்துக்கொள்ளலாம்.மீண்டும் வெளியே செல்லும் போதும் அதே ஆடையை அணிய பழகலாம்.வீட்டிலுள்ள பிற ஆடைகளுடன் அதனைக் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.





ஒரு பர்ஸ்:


வெளியே செல்லும் போது ஒரே பர்ஸை தொடர்ந்து எடுத்து செல்ல வேண்டும்.வெளியே எடுத்துச் செல்லக்கூடிய அந்த பர்ஸில் உள்ள பணம் மற்றும் நாணயங்களை வீட்டில் உள்ள மற்ற பணம் மற்றும் நாணயங்களுடன் கலந்து விடாமல் அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.




ஒரு வாகனம்:



இரண்டு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ,நாம் ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் ஒரே வாகனத்தை மட்டுமே பயன்படுத்தினால் சிறந்ததாக இருக்கும்.



ஒரு பை:


ஒவ்வொரு முறை நாம் வெளியே செல்லும் போதும் வெவ்வேறு பைகளை எடுத்துச் செல்வதை தவிர்த்து,ஒரு குறிப்பிட்ட பையை மட்டும் தொடர்ந்து எடுத்துச் செல்வது சிறந்தது.வீடு திரும்பிய பின்,ஆடைகள் போலவே பையையும் துவைத்து உலர்த்த வேண்டும்.


மேலும் பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள கவர்களை கவனமாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

அவ்வாறே வெளியே செல்லும்போது உடன் எடுத்து செல்லும் பொருட்களை வீடு திரும்பிய பிறகு போட்டு வைப்பதற்கு என தனியாக ஒரு பை வைத்துக்கொள்ள வேண்டும்.அதனை வீட்டு நபர்கள் தொடமுடியாத தூரத்தில் வைத்திருப்பது சிறந்தது.




ஒரு காலணி:


நம்மிடம் பல காலணிகள் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் வெளியே செல்லும்போது ஒரு காலணியை மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது.அதனை பயன்படுத்தி விட்டு யாரும் தொட முடியாத இடத்தில் தனியாக வைத்திருக்கலாம்.




ஒரு போன்:


வீட்டில் உள்ளவர்களுடன் வெளியே சென்ற நபர் தொடர்பு கொள்ள சாதாரணமான ஒரு கீபேட் போனை பயன்படுத்தலாம்.இந்த போனை அதற்காக மட்டுமே பயன்படுத்திவிட்டு பின் தனியாக வைத்துவிடலாம்.




ஒரு பழக்கம்:


பெற்றோர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியவுடன் குழந்தைகள் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொள்வது இயல்பு.இன்றைய நாளில் அந்த பழக்கம் மிகவும் தவறானது என்பதை குழந்தைகளுக்கு கூறி புரிய வைக்க வேண்டும்.வெளியே சென்று வந்த நபர் குளித்த பின்தான் அவரைத் தொட வேண்டும் என்பதை குழந்தைகள் மட்டுமின்றி அனைவருமே பின்பற்ற வேண்டும்.



ஒரு நோக்கம்:


இன்றைய சூழலில் நாம் வெளியே செல்வது நண்பர்களுடன் பொழுது போக்கவோ,அரட்டை அடிக்கவோ,நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிடவோ அல்ல.நமது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை சேகரிக்கவே என்ற அடிப்படையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.அந்த நோக்கத்தை மட்டுமே நிறைவேற்றி கொண்டு முடிந்தவரை விரைவாக வீட்டிற்க்கு திரும்பிவிட வேண்டும்.


-அகன் சரவணன்

No comments:

Post a Comment