Oct 30, 2019

ஊழல் விழிப்புணர்வு வாரம் - நிகழ்வுகள்.









ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 வரை ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனை ஒட்டி நமது பள்ளியின் மாணவர்கள் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நமது பள்ளியின் செயல்பாடுகளுக்காக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் பள்ளிக்கு நற்சான்று வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டின் மையக் கருத்தான "நேர்மை - ஒரு வாழ்வியல் முறை" எனும் தலைப்பில் ஓவியப்போட்டியும் நடைபெற்றது.

இலஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் மாபெரும் குற்றங்கள் எனும் புரிதல் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியைப் பெற்றோரை வீடுகளில் ஏற்க வைக்கவும்,
இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான எதிர்காலத்தை உருவாக்கவும் மாணவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்!


நேர்மையான,தெளிவான சுயசிந்தனை கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எமது பெருங்கனவின் சிறு விதைகள்:

"நேர்மைக் கடை"விதை :




எமது வகுப்பில் "நேர்மைக் கடை" நடைமுறையில் உள்ளது. அதில் தொடர்ந்து மாணவருக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கிறோம்.பொருட்களின் விலை பட்டியலும் வைக்கப்படும்.

 மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கடையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்,மேலும் அவர்கள் விரும்பிய கட்டணத்தை அருகிலுள்ள சிறிய பெட்டியில் செலுத்தலாம்.

பொருட்கள் வாங்கப்பட்ட தொகையை விட ஒவ்வொரு முறையும் பெட்டியில் உள்ள தொகை அதிகமாகவே உள்ளது.இது தெரியாமல் தவறுதலாக நடைபெறுவதில்லை.
மாணவர்களின் நேர்மை மற்றும் பரந்த மனப்பான்மை காரணமாக இது நிகழ்கிறது.

இது குறித்து எனக்கு பெரிதும் மகிழ்வே.
 "இந்த உலகத்தைச் சொர்க்கமாக்குவதற்கான சிறந்த வழி நேர்மையே"


வாக்குகள் விற்பனைக்கு அல்ல விதை:




சமுதாயத் தீமைகளைக் கண்டு வெறுமனே குறைகூறிப் புலம்புவதை விட,அதனைச் சற்றேனும் மாற்றியமைக்க முயலுதல் சிறந்தது என்பர்.ஏனெனில் தனி மனிதன் தவிர்த்து சமுதாயம் என்று தனியாக ஒன்றுமில்லை.அதிலும் சமுதாயத்தில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஒரு ஆசிரியருக்குப் பெரும் பங்குண்டு.

எமது ஆசிரியப் பணியில் யாம் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது,
"குறிப்பேடு ஏன் வாங்கவில்லை?"
என்ற எமது வினாவிற்கு
"பெற்றோரின் ஓட்டுக்கான பணம் கிடைத்தவுடன் குறிப்பேடு வாங்கி விடுகிறேன்" என்ற மாணவனின் பதில்.


இந்த பதில் எமக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.நிதர்சனம் அப்பட்டமாய் கண்முன் நின்றது.

சனநாயகத்தின் தோல்வியும்,இன்றைய மக்களின் செயல்பாடுகளால் அது கேலிக்கூத்தாக மாறி இருப்பதும் முகத்தில் அறைந்தது.

எவ்விதக் குற்றவுணர்வும் இன்றி மாணவனால் கூறப்பட்ட பதில்,பிஞ்சு மனங்களில் விதைக்கப்பட்ட நஞ்சை வெளிப்படுத்துவதாய் இருந்தது.

இரு இரவுகள் உறக்கமின்றிக் கழிந்தன.வாக்கிற்கு பணம் பெறுதல் தவறு என்று உணராத இளைய தலைமுறையைக் கண்டு ஒரு ஆசிரியராகப் பெரும் குற்ற உணர்வு ஏற்பட்டது.


கேள்விகளில் இருந்து மட்டுமல்ல,சில நேரங்களில் பதில்களில் இருந்தும் கூட மாற்றங்கள் பிறக்குமல்லவா?


மாபெரும் விருட்சத்தின் விதை சிறியது அன்றோ?எமது மாணவரிடம் மன மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தோம்!


மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல! பெருஞ்செயல்!

வெறுமனே சொற்களால் அறிவுரை கூறுவது எல்லா நேரங்களிலும் பயனுடையதாய் இராது.

செயல்பாடுகள் வழியே கற்றுக் கொள்ளுதலே  சிலையில் எழுத்தாம்.எம் மாணவரைச் செயல்படவைக்க முடிவு செய்தோம்.

வாக்கு விற்பனையின் தீமைகள் குறித்து படக்காட்சிகள்,உரைகள் உள்ளிட்டவை மூலம் மாணவர்களுக்கு தெளிவை அளித்த பின்,ஒரு குறிப்பிட்ட நாளில் மாணவர்களைத் தனித்தனியாக "வாழ்த்து அட்டைகளைத்" தயாரிக்கச் செய்தோம்.

அவற்றில் தேர்தல் நாள் குறிப்பிடப்பட்டு,
வாக்களிப்பதன் அவசியம் குறித்த படங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் மாணவர்களால் எழுதப்பட்டன.

உச்சமாக "வாக்கு விற்பனைக்கு அல்ல" எனும் வாசகம் வாழ்த்து அட்டைகளில்  பெரிதுபடுத்தப்பட்டு மாணவர்களால் எழுதப்பட்டது.


அவற்றை பெற்றோரிடம் அளித்து "வாக்களிக்கப் பணம் பெறமாட்டோம்" எனும் உறுதி மொழியைப் பெறச் செய்தோம்.

வாழ்த்து அட்டைகளை அளித்தவுடன் பெற்றோரின் பதில்கள் மற்றும் செயல்பாடுகளை அடுத்த நாள் மாணவர்கள் வகுப்பில் பகிர்ந்து கொண்டனர்.

"கொடுப்பதினால் பெறுகிறோம்" என்பதில் தொடங்கி "இல்லாததால் பெறுகிறோம்"வரை கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

விமர்சனங்களைத் தாண்டி,இந்த விஷயத்தில் தாங்கள் செய்வது தவறு எனும் உணர்வு முதன் முறையாக மாணவர்களால் பெற்றோருக்கு ஊட்டப்பட்டது.

பிறர் அறிவுரையைக் கேட்டுப் பொங்கும் பெற்றோர் கூட,மாணவரின் அன்புரையில் இருந்த நியாயத்தை உணர்ந்தனர்.தம் குழந்தைகள் குறித்த பெருமித உணர்வு கொண்டனர்.


அதன் பயனாய் வாக்கிற்குப் பணம் அளிக்க வீடுகளுக்கு வந்தோரைப் பெற்றோரும்,பெற்றோர் அனுமதியுடன் மாணவர்களும்  திருப்பி அனுப்பும் நிகழ்வுகள் தொடங்கின.வெற்றிகரமாகத் தொடர்ந்தன.பெற்றோர் அனைவரும் வாக்களித்தனர்.பணம் பெறாமல்!


இச்செயல்பாடு குறித்து செய்தித்தாள்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன.
திருப்பூர் மாநகரின் மாற்றம் தரும் ஒரு நிகழ்வாய் மாணவர்களின் இச்செயல்திட்டம் மாறியது.


அன்பு,கருணை,இரக்கம் ஆகிய அனைத்து நற்குணங்களின் வேராய் இருப்பது நேர்மை. ஆனால் நேர்மை குணம் உடையோரை இந்தச் சமூகம் சற்று ஆச்சரியத்துடனே உற்று நோக்குகிறது!எதிர்கால இளைய தலைமுறை நேர்மையான மனிதர்களைக் கொண்டிருப்பின் இந்தப் பூமியே சொர்க்கப் பூங்காவாக மாறிவிடும்.

இன்றைய இளைய தலைமுறைக்குக் கற்பிக்க ஒரு ஆசிரியருக்கு மேம்பட்ட திறன்கள் தேவை.ஒரு ஆசிரியர் தனக்குத் தானே நேர்மையை வளர்த்துக் கொள்வதும்,அது மாணவரிடம் வளரத் தேவையான செயல்பாடுகளைத் திட்டமிட்டு வடிவமைத்தலும் இன்றைய சூழலில் பெருங்கடமையாகிறது.


இனி தேர்தல்கள் வரும்போதெல்லாம் இது போன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டு நடத்த தீர்மானித்துள்ளோம்.

எமது வகுப்பறை சார்ந்த பிந்தைய நிகழ்வுகளுக்கு இந்நிகழ்வு ஒரு துண்டுகோலாய் அமைந்தது.

நூறு சதவீதம் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எமது எண்ணத்தை மேலும் வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதாய் மாணவனின் பதிலும்,அதனை ஒட்டி நிகழ்த்தப்பட்ட செயலும் அமைந்தன என்றால் அது மிகையில்லை.


"கொடுத்து மகிழுதல்" விதை :



பள்ளியில் 'கொடுத்தலில்  மகிழ்ச்சி' நிகழ்வைத் தொடர்ந்து  நடத்துகிறோம்.

எங்கள் மாணவர்கள் பிற மற்றவர்களுக்குக் கொடுத்து அதை ரசிப்பர்,பெரும் மகிழ்வு அடைவர்!

"நமக்கு பெறுவதன் மூலம் ஒரு வாழ்க்கை கிடைக்கிறது.ஆனால் நாம் கொடுப்பதன் மூலம் ஒரு வாழ்க்கையை
உருவாக்குகிறோம் "

"நம்பிக்கையுடன் தொடர்ந்து விதைப்போம்.
முளைத்தால் மரம்! இல்லையேல் உரம்!"

No comments:

Post a Comment