Aug 31, 2019

புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2019




நேர்மையான,தெளிவான சுயசிந்தனை கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எமது பெருங்கனவின் சிறு விதையின் வேராக இந்த ஆண்டிற்கான புதிய தலைமுறை விருது அமைந்துள்ளது.

கல்வி மாற்றத்தால் சமுதாய மாற்றம் நிகழுமா? அல்லது சமுதாய மாற்றத்தால் கல்வியில் மாற்றம் நிகழுமா? என்பது பெரும் விவாதத்திற்கு உரிய ஒன்றாக அமைந்துள்ள இன்றைய சூழலில், ஆசிரியர்களின் பணிச்சுமையும்,அதனால் மனச்சுமையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன!

மாணவரிடம் சிறப்பான விளைவுகளை உருவாக்க,பள்ளி வீட்டுச்சூழலின் நீட்டிப்பாக இருக்க வேண்டும்.வீட்டிலும் பள்ளியிலும் மாணவர்களுக்குக் கிடைக்கும் மனப்பதிவுகளில் ஓர் ஒத்திசைவு அவசியம்.இந்த ஒத்திசைவைப் பள்ளிகளில் ஏற்படுத்தலும்,எது வெற்றி என்பதில் மாணவருக்குத் தெளிவை உண்டாக்குதலும் ஆசிரியருக்கு சவாலான ஒன்றாகும்!

பள்ளிகளில் கற்றல் - கற்பித்தலில் மிகுதியும் நிறைந்துவிட்ட சிக்கல்களும்,அழுத்தங்களும்,
வெம்மையும்,வெறுமையும் சூழ்ந்திருக்கும் இன்றைய நிலையில்,இவ்விருது வழங்கும் விழா சற்று இளைப்பாறும் இடமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை!

இன்றைய இளைய தலைமுறை இணைய தலைமுறையாகவே உள்ளது.
"கற்றுக்கொள்ளக் கற்றுக்கொடுத்தல்"என்பது அவசியமான ஒன்றாகிவிட்டது.இணைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்கு மேம்பட்ட திறன்கள் தேவைப்படுகின்றன.
புறத்தூண்டல்கள் எதுவுமின்றி சுய ஆர்வத்தால் தூண்டப்பட்டே இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

புதிய தலைமுறை விருது போன்ற புற ஊக்குவிப்புகள்,மேம்பட்ட ஒருங்கிணைந்த இயல்பூக்கத்தை அதிகரிக்கச் செய்யவல்லவை!

விருது வழங்கிய புதிய தலைமுறை குழுமத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.விருதால் மனமகிழ்வுடன் பொறுப்பும் அதிகரித்துள்ளது!

தொடர்ந்து பயணிப்போம்.....🚶

No comments:

Post a Comment