Apr 23, 2019

உலக புத்தக தினம்



உலக புத்தக தினம்:


அறிவு வளர்ந்து முதிர முதிர வாய் தன் வேலையைக் குறைத்துக் கொள்ளுமாம்.அந்த வகையில் அறிவை முதிரச் செய்வன புத்தகங்கள். 

ராணிகாமிக்ஸ் கதையில் ஆரம்பித்தது பசுமையாய் நினைவில் இருக்கிறது.மாயாவியின் முகத்தை இறுதி வரை பார்க்க முடியாமல் இருப்பதே பெரும் சுவாரஸ்யம்.அடுத்ததாய் அறிமுகமானவை ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவல்கள்.அவை விவேக்கை ஆதர்ஷ கதாநாயகனாய் வரித்துக் கொண்ட தருணங்கள். இவ்வளவு சுலபமாய் அறிவியலை அறிந்து கொள்ள முடியுமா என பெரும் வியப்பு உண்டாக்கிய நாட்கள் அவை.

அதன் பிறகு வந்தவை நூலகங்களே கதியாய்க் கிடந்த மகிழ்வான நாட்கள். சுஜாதா,பாலகுமாரன், சாண்டில்யன் நாவல்கள் கிடைத்து விட்டால் பெரும் 
பொருட்குவியல் கிடைத்ததாய் மகிழ்ச்சி மேலிடும். அறிவியல் பற்றிய பார்வையையும்,வாசிப்பு அனுபவத்தையும் புரட்டிப் போட்ட சுஜாதா எழுத்துகள்,புதுமுகச் சிந்தனையின் வாசலாக பாலகுமாரன் எழுத்துகள்,வரலாற்றின் வாயில்களை வித்தியாசமாய் திறந்த சாண்டில்யன் எழுத்துகள் என ஆரம்ப கால வாசிப்பு அனுபவம் இனிமையானது.

பல நாழிகைகள்,நடுசாமம் வரை விழித்திருந்து சாண்டில்யனின் வருணனைகளைப் பருகிய சுவாரஸ்ய தருணங்கள்.உடையார் படித்துவிட்டு உடைந்து போனது, ஏன் எதற்கு எப்படி படித்து விட்டு அறிவுப் பசியில் அலைந்தது,பொன்னியின் செல்வனைப் படித்து வந்தியத் தேவனாய் வசித்தது நினைவலைகளில் வந்து வந்து போகின்றது.

அதன் பிறகு அறிமுகமான எழுத்தாளர்களும், எழுத்துகளும்,பார்வையின் கோணங்களை மாற்றினாலும், வித்தியாசமான அனுபவங்களை ஊட்டினாலும் ஆரம்பப்பள்ளி போல ஏக்கத்துடன் நினைவு கூறத் தக்கவை ஆரம்பகால வாசிப்புகளும், வாசிப்பு அனுபவங்களுமே.

அடுத்தவர் அறிவைக் கடன் வாங்கிக் கொண்டே இருக்காமல் குறிப்பிட்ட காலத்தி்ற்குப் பின் வாசிப்பதை நிறுத்திவிட்டு,தானாகச் சிந்திக்க வேண்டும் என ஒரு சாராரும்,சாகும் வரை வாசிப்பை நிறுத்தக், கூடாது என ஒரு சாராரும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

எது சரி என முடிவு எடுக்காமல்
"நீர்வழிப் படூஉம் புனல் போல"ஆற்றோட்டமாய் செல்லத்தான் தோன்றுகிறது.
வாசிப்போம் சுவாசிப்போம்.
உலக புத்தக தின வாழ்த்துகள்.

- சரவணன்

No comments:

Post a Comment