Feb 17, 2019

இந்தியாவிற்கு ஒரு கடிதம்








என் இனிய இந்தியா, நலமா?

கோடிக்கணக்கான முகங்களில், ஒரு முகத்தில் கூட புன்னகைக்க மறுக்கிறாயே.அத்தனை துக்கமா? மக்களாட்சி நாடு தானே நீ? மன்னராட்சிக்கு ஏதும் மாறிவிட்டாயா?

நீ வல்லரசு நாடாக மாறுவாய், குதிரைப் பாய்ச்சலில் ஓடுவாய் என மக்கள் கனவு கண்டு கொண்டிருக்க,நீயோ தவழ்ந்து செல்லவே தடுமாறுகிறாயே!

தவழ்ந்தாலும், தடுமாறினாலும் எங்கள் தாய் நீ.

எங்கள் துக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். இளைப்பாறல் தருவாய் என்ற நம்பிக்கையுடன்!



"மதிப்பிழந்த பணம் "


     பண மதிப்பு இழப்பு எங்களைப் புரட்டிப் போட்டது. விரட்டி விரட்டி துரத்தியது. கருப்புப் பணம் ஒழியும், கள்ள நோட்டு ஒழியும், தீவிரவாதம் ஒழியும் என்ற நம்பிக்கையோடு நாட்களைக் கடத்தினோம். ஆனால் அடைந்த பயனைப் பட்டியலிட்டால், பட்டியல் காலியாக அல்லவா இருக்கிறது!  1%  பழைய பணம் தான்  வங்கிக்குத் திரும்ப வரவில்லையாம். மீதம் அனைத்தும் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு விட்டது எனவும், வெறும் 41 கோடி அளவுதான் கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளது எனவும் அலறல் அறிக்கை வெளியிடுகிறது ஆர்.பி.ஐ.

முன்னை விட தீவிரவாதம் பெருகிவிட்டது என சவுத் ஏசியன் டெரரிசம் போர்ட்டல் (SATP)  இன் அறிக்கை முகத்தில் அறைகிறது. பணவீக்கமும்,வளர்ச்சி வீதமும் பின்னோக்கி பயணிக்கின்றன. பின் எதற்கு நாங்கள் கால்கடுக்க வங்கிகளிலும் ஏ டி எம் களிலும் நின்றோம்? என்ற சாமானியனின் வினாவிற்கு விடையளிக்க எந்தத் தலைவரும் தயாராக இல்லை. வழக்கம் போல பொறுமையின் சிகரமாய், அமைதியின் ஆர்வலராய் இதனைக் கடந்து செல்கிறோம் இதுவும் கடந்து போகும் மனநிலையுடனும்,ஏமாளி இந்தியனாகவும்...


"வேண்டாத இணைப்பு"


      நதிகளை இணைக்கிறோம் என்று புதிய இந்தியா புறப்பட்டு உள்ளது. 5.5 இலட்சம் கோடியில் அதற்கான அடிக்கல்லை நாட்டி உள்ளார் பாரதப் பிரதமர்.

ஆகா ஓகோ என பாராட்டுப் பத்திரம் வாசிக்கத் துவங்கியுள்ளனர் ஆதரவாளர்கள். இதில் உள்ள யதார்த்த உண்மை புரிந்தால் இது பாராட்டக் கூடியதல்ல என்பதை அறியலாம்.

ஒவ்வொரு நதியும் ஒரு தனி அலகு (UNIT). அதற்கென்று தனித்துவம் உண்டு. ஒவ்வொரு நதியின் இயல்பும், பாயும் தன்மையும்,அதில் வாழும் உயிர்களும் வெவ்வேறானவை. நதிகளை அதன் போக்கிலே விட்டுவிடுவதே புத்திசாலித்தனம்.வறட்சி, வெள்ளம் போன்றவை நதிகள் இணைப்பால் தீர்க்கப்படுமா? என்றால் இல்லை என்பதே நிதர்சனம். காடுகளை அழித்து ஆசிரமம் அமைத்து விட்டு,நதிகளைப் பாதுகாக்கிறோம் என்று கிளம்பி விளம்பரம் செய்கின்ற புத்திசாலிகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

நீர் மேலாண்மையில் உச்சத்தை அடைந்த இராஜராஜ சோழனும், இராேஜந்திரனும், கல்லணையை உருவாக்கிய கரிகாலனும், உள்ளாட்சி நிர்வாகத்தின் எல்லை வரை சென்ற அக்பரும், ஷெர்ஷாவும், நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயரும் ஏன் நதிகளை இணைக்க முயலவில்லை?

இவர்கள் காலத்தில் நதிநீர் இணைப்பு சாத்தியமாகி இருக்கக் கூடிய ஒன்று தான். ஆனால் அது உயிரின,சமூக சுமூகச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை இவர்கள் அறிந்திருந்தனர்.

அக்காலம் வேறு,இப்போது அவசியம் தேவைப்படுகிறது என்ற கூற்றும் பொய்யானதே.காடுகளை அழித்து, ஆக்கிரமிப்புகளைப் பெருக்கி,நதிகளைச் சுருக்கி விட்டு நீர்போதவில்லை என்பது எந்த விதத்தில் நியாயம். வனப் பரப்புகளை அதிகரித்து, நதிகளைத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே தேவைக்கு அதிகமாய் நதிநீர் கிடைக்குமே.இயற்கைச் சமநிலை பாதுகாக்கப்படுமே. இயற்கையைச் சிதைத்து, நதிகளை இணைத்துத்தான் வறட்சி மற்றும் வெள்ளத்தைச் சமாளிக்க முடியுமா? இணைப்பால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உலக அளவில் உதாரணங்கள் உண்டே. நதி நீர் இணைப்பை சிலாகித்துப் பேசுபவர்கள் ஆந்திரா வரை ஒரு நடை சென்று பார்த்தால் உண்மை விளங்கும். ஆட்சியாளரின் விளம்பரப் பசிக்கு ஆற்றங்கரையோர மக்கள் எவ்வாறு பலி கொடுக்கப்பட்டு இருக்கின்றனர் என்று. விளம்பரம் தேடும் அரசுகளிடம் நதி நீர் இணைப்பு எனும் கோஷம் கிடைத்தால் விட்டு விடுவார்களா? இயற்கையை வதைக்காமல், மனித வாழ்வைச் சிதைக்காமல் விடாது நதி நீர் இணைப்பு...




"நீட் நோட்"


      மீன்களையும், மான்களையும் ஒரே மாதிரி சோதனை செய்து யார் சிறந்தவர் என கண்டறிவது போலதான் இருக்கிறது நீட்.

பெரிய கட்டடங்கள் கட்டும் போது நரபலி இடுவது போல நீட் எனும் கல்லறைக்கு உயிர்ப்பலியிடப்பட்டு உள்ளார் அனிதா! மனதளவில் பலியிடப்பட்டோர் எத்தனை குழந்தைகளோ?  அப்படியெனில் எம் மாணவர் திறமை அற்றவர்களா? அல்லது முட்டாள்தனமான தேர்வு முறை,திறமையான மாணவரைத் தேர்ந்தெடுக்கும் திறமையற்றதா?


எங்கள் மாணவருக்கு பொருளோ அதன் ஆழமோ தெரியாமல் இல்லை. அதைப் புரிந்து கொள்ள இயலாத மொழியும், சூழ்நிலையும், வழிமுறையுமே நீட் தோல்விகளுக்குக் காரணம். எம் மாணவர் கற்றுஅறிந்த,புரிந்த வழிமுறையில்,எம் சூழலை ஒட்டிய தேர்வாயின் உலகிற்கு சவால் விடக்கூடியோர் எம் மாணவர்.


 முதலைகளையும், முயல்களையும் நீரில் போட்டியிடச் செய்வது போல இருக்கிறது நீட் தேர்வு முறை.இது மாணவர்களின் தோல்வி அல்ல.தேர்வின், அரசுகளின் தோல்வி. IIT, IIM போன்று நுழைய முடியாத அளவு மருத்துவப் படிப்பும் மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது. உலக சுகாதார நிறுவன (WHO)வழிகாட்டுதலே தொடர்ந்து கடைபிடிக்கப்படுமாயின், மத்திய, மாநில அரசுகள் சுகாதாரப்பொறுப்புகளில் இருந்து தன்னை முழுதும் விடுவித்துக் கொண்டு மருத்துவத்துறையை முழுமையான தனியார்மயத்தை நோக்கியே தள்ளுகிறது என்று பொருள்.



"நாளொரு போராட்டம்"



     போராட்டம் செய்து தான் அடிப்படை உரிமைகளைக் கூட பெற முடியும் என்ற அவல நிலையில் வாழ்கிறது இளைய இந்தியா.ஜல்லிக்கட்டு நம் உரிமை. ஆனால் அதற்காக நடைபெற்ற மெரினா புரட்சி ஆட்சியாளர்களுக்குப் பாடமாக அமைந்து இருக்க வேண்டும். ஆனால் மக்கள் போராடுவதற்கான சூழ்நிலைகளை நம் அரசாங்கங்கள் அடிக்கடி உருவாக்கி விடுகின்றன. கடற்கரையைப் பூட்டி வைக்கும் அவலம் எங்கேனும் நிகழ்ந்ததாக வரலாறு உண்டா? ஆனால் நம் கண் முன் நிகழ்கிறது வரலாற்றுப் பிழையாக . கூடங்குளம்,மது எதிர்ப்பு, நெடுவாசல், நீட், தூத்துக்குடி, அரசு ஊழியர் ஆசிரியர் என போராட்டங்கள் இல்லாத நாள் இல்லை.போராடாத ஆள் இல்லை. அரசாங்கங்களின் செயல்பாடுகளில் ஒருவிதத்தில் இந்தியா பயனடைகிறது.போரட்டக் களங்களால் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்குப் பயிற்சிகளும் அளித்து வருகின்றன அரசுகள்!





"எம்மதமே நம்மதமா?"


     மதச்சார்பற்ற அரசு என அரசியலமைப்பு புத்தகத்தில் மட்டும்தான் இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்கிறார் 12 ஆண்டுகளாக துணைக் குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற ஹமீது அன்சாரி. தெருவிற்கு நான்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அதற்கு ஆகும் செலவுகள் நன்கொடை என்ற பெயரில் சிறுபான்மை மக்களிடமும் வற்புறுத்தி வசூல் செய்யப்படுகின்றன. கொடுக்காதவர் தாக்கப்படுவது தொடர்கதையாகிறது.

வன்முறையில் கொல்லப்பட்டோர் பிணங்களை எடுத்துச் செல்லும் போது சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அயோத்தியில் மத நல்லிணக்க மாநாடுகள் நடத்தப்பட்டதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் மேல்முறையீடு கிடையாது எனவும், ஆதரவாக வந்தாலும் அவ்விடம் பெரும்பான்மையினரிடம் ஒப்படைக்கப்படும் என்ற ரீதியில் சிறுபான்மைத் தலைவர்கள் பேசும் பேட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

சமயச் சார்பின்மை என்ற சொல்,செயலாக அல்லாமல் சொல்லாக மட்டுமே இருக்கிறது.


"பழுதான எந்திரம்"



     தமிழ்நாடு அரசு செயலற்ற அரசாக ஸ்தம்பித்து நிற்கிறது.அரசு எந்திரம் சுழல்வதே பெரும் சுமையாக இருக்கிறது.டெல்லியில் சொல்வதை அப்படியே தமிழ்நாட்டில் சொல்ல ஒரு மீடியா போதுமே.மாநில அரசாங்கமா அந்தப் பணியைச் செய்வது?டெல்லிக்கு அதிகம் காவடி தூக்குவது யார் என்ற போட்டியே ஆட்சியாளர்களிடம் காணப்படுகிறது. சகாயங்களும், உதயச்சந்திரன்களும் முடக்கி வைக்கப்பட்டு உள்ளனர். பெரும்பான்மை ஆட்சியாகவும் இல்லாமல், சிறுபான்மையினர் ஆட்சியாகவும் இல்லாமல் தத்தளிக்கிறது தமிழகம்.

எம்.எல்.ஏக்களைச் சமாளிக்கவே ஆட்சியாளர்களுக்கு நேரம் போதவில்லை.

ஜெயலலிதாவும், கருணாநிதியுமே பரவாயில்லையோ என்ற மனநிலைக்கு தமிழக மக்கள் வந்து விட்டனர்.

தினமும்போராட்டங்களின் முகத்தில் தான் தமிழகம் விழிக்கிறது. இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்ற ஜென் மனநிலையில் இருக்கிறது தமிழக அரசு.




"மறந்துபோன மானியம்"



      சாமனியன் பெற்று வந்த மானியங்கள் சாமர்த்தியமாகத் தடுக்கப்பட்டு விட்டன. மக்களுக்கு உணவு அளிக்க வேண்டியது அரசுகளின் கடமை என்பதை அரசுகள் சவுகரியமாக மறக்கத் தொடங்கியுள்ளன. சிலிண்டருக்கு வங்கியில் மானியம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு, அறிவிப்பாக மட்டுமே இருந்து அரைகுறையாகவே செயல்படுத்தப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு மசோதாவோ கழுத்தின் மேல் கத்தியாக நிற்கிறது. எரிபொருள் விலை தினமும் பைசாக்களில் ஏறுகிறது யாருக்கும் தெரியாமல்.உணவுப் பொருட்கள் கிடங்குகளில் வீணாகப் போனாலும் பரவாயில்லை, மக்களுக்கு இலவசமாக அளிக்க மாட்டோம் என்பது என்ன வித மனநிலை என்பது தெரியவில்லை. சாலை ஓரங்களிலும், இடையிலும் உள்ள இடைவெளிகளில், பூச்செடிகளுக்குப் பதில் காய்கறிகளைப் பயிரிட்டால் ஏழை மக்கள் பயன் பெறுவார்களே என்ற ஆலோசனையை அரசுகள் ஏற்பது இல்லை. மக்கள் தங்கள் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும், மக்களுக்குத் தேவைகள் நிறைவேறிவிடக் கூடாது என்பதில் அரசுகள் உறுதியாக உள்ளன.



"போராளி விவசாயி"


     மாதக்கணக்கில் டெல்லியில் போராடிய விவசாயிகளைக் கண்டு கொள்ள ஆள் இல்லை. அவர்களை என்னவோ வேற்றுகிரக வாசிகள் போல பார்த்து நகர்கிறது ஆளும் வர்க்கம்.அவர்கள் ஆட்சியாளர்களின் சொத்துகளையா கேட்கின்றனர்? மல்லைய்யாக்களுக்கும், மல்டி மில்லியனர்களுக்கும் வராக்கடன் என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளில் கடன் தள்ளுபடி செய்யும் அரசுகள், சில ஆயிரம்  விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யத் தயங்குவது ஏன்? இது தொடர்கதையாகி விடும் என்றா? ஆகட்டுமே. நம் விவசாயிக்குக் கொடுக்க முடியாதபணம் இந்தியாவில் இருந்தென்ன? இல்லாவிட்டால் என்ன?

விவசாயிகளை போராட வைப்பது முன் கிளையில் அமர்ந்து கொண்டு பின் கிளையை வெட்டுவது போலாகாதா?

 எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்கும் எதிர்க்கட்சிகளிடம் இந்திய விவசாயிகளுக்கான ஒருமித்த போராட்டத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?



"நிலைக்குமா ஒதுக்கீடு?"


   தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. முன்னேறிய மக்களுக்கு 10% ஒதுக்கீடு என்பது விநோதமாகவே உள்ளது.அம்பேத்கர் உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் இட ஒதுக்கீடு என்ற முறையைக் கொண்டு வந்ததே சமூக நீதி வேண்டி. சமதர்ம சமத்துவம் நாடி.இன்று இந்தியாவில்  சமூக நீதி எய்தப்பட்டு விட்டதா? என்றால் இல்லை என்பதே கசப்பான பதிலாக இருக்கும்.இலங்கைப் படையால் சுடப்பட்டால் தமிழக மீனவன், தற்கொலை செய்து கொண்டால் தலித் மாணவி,பதக்கம் பெற்றால் இந்திய வீரர் என்று தானே இன்று நடைமுறை இருக்கிறது! கீழ் மட்ட மக்கள் மேலே வந்து விடக் கூடாது என்பது சிலரின் கொள்கையாக இருக்கின்றது. அதற்கு அரசுகளும் ஒத்து ஊதுவது தொடர்கதையாகவே உள்ளது. இட ஒதுக்கீடு இருக்கும் வரையே சாமானியனும் சாதிக்க முடியும், இன்றேல் சாமானியனுக்கு சாதனை கானல் நீர் என்பதை எப்படி புரிய வைப்பது எம் அரசுகளுக்கு? தூங்குபவரை எழுப்பலாம்.தூங்குவது போல நடிப்பவரை எவ்வாறு எழுப்புவது?



"வரியும் கரியும் "


     "ஒரு யானை களத்துமேட்டில் இருந்தால், அதற்கு வேண்டிய உணவு, போதுமான அளவு பாகனால் கிடைக்கும்.

அதே யானை வயலில் இறங்கி உண்ண ஆரம்பித்தால், உணவும் பெருமளவு வீணாகும். யானைக்கு பசியும் அடங்காது. அது போல ஆட்சியாளர் குடிமக்களிடம் போதுமான அளவு காலம் அறிந்து வரிவசூல் செய்தால்,அது இரு தரப்பிற்கும் மிக்க பயனளிக்கும். தானே மிக அதிகமாக வரி நிர்ணயம் செய்து கொண்டால், யானை வயலில் இறங்கி உண்டால் ஏற்படும் நிலையே ஏற்படும்" என்பது  அவ்வை கூற்று.

இது இன்றைய ஜிஎஸ்டி க்கும் பொருந்தும்.
மிக அருமையான  வரிவசூல் முறை ஜிஎஸ்டி. ஆனால் அதன் அளவு மிக மிக அதிகம்.அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கூட மிக அதிக வரி வசூல் செய்யப்படுகிறது. வளர்ந்த நாடுகளிலேயே ஒற்றை இலக்க வரி உள்ள நிலையில் இந்தியாவில் ஜிஎஸ்டி இன் அதிக அளவு 21% என்பது அநீதி இல்லையா? ஒரு  உணவகம் சென்று 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் சிஜிஎஸ்டி , எஸ்ஜிஎஸ்டி என வசூலிக்கப்படும் தொகை மலைக்க வைக்கிறது. பெரும்பான்மை அடிப்படை உணவுப் பொருட்களுக்கு இந்நிலை தான்.இது நமக்கே தெரியாமல் நம் பையில் உள்ள பணத்தை எடுப்பது போன்றதல்லவா?

மக்களுக்காகத் தான் அரசு.அரசிற்காக மக்கள் இல்லையே!




           ஒரு கொடுமைக்கார அரசன் தன் குடிமக்களிடம் ஒரு மூட்டை நெல் கொடுத்து ஒரு மூட்டை அரிசி கேட்பானாம். பிரித்து எடுக்கும் போது பாதி மூட்டை உமியாகப் போய் விடுவதால், மக்கள் கைக்காசு போட்டு பாதி மூட்டை அரிசி வாங்கி,ஒரு மூட்டை அரிசியாகக் கொடுப்பார்களாம். அதனால் அவனை மோசமான அரசன் என்று தூற்றினார்களாம். ஒரு நாள் மரணப்படுக்கைக்குச் சென்ற அரசன்,தன் மகனிடம் தனக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கச் செய் என்ற வேண்டுகோளுடன் இறந்து விட, அடுத்து அரசனான மகன், மக்களிடம் ஒரு மூட்டை உமி மட்டும் கொடுத்து, ஒரு மூட்டை அரிசி கேட்டானாம். மக்கள் முழு மூட்டை அரிசியும் காசு போட்டு வாங்கிக் கொடுக்க வேண்டிய நிலையில், இவன் தந்தையே பரவாயில்லை. தந்தை நல்லவன். மகன் கொடுங்கோலன் என்றார்களாம்!

 

         எங்கள் இனிய இந்தியாவே!
முன்பு ஆட்சி  செய்தவர்களே பரவாயில்லை என்ற நிலை இன்று உருவாகி விட்டது என்ற கசப்பான உண்மையுடன் விடைபெறுகிறோம்.


- சரவணன்



   

No comments:

Post a Comment